Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Sunday, January 22, 2017

#ஜல்லிக்கட்டு புரிந்து கொள்வோம்! காப்போம்! #jallikattu

@periyastar ன் ஆங்கில டூலாவின் தமிழ் மொழிபெயர்ப்பு இது.

மொழியாக்கம்: எ.அ.பாலா (@ammu_maanu)

#ஜல்லிக்கட்டு புரிந்து கொள்வோம்! காப்போம்! #jallikattu

தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை, தமிழர்களின் ஒரு பிரச்சினையாக, தமிழரின் பாரம்பரிய/தொன்மையான விளையாட்டு குறித்த ஒரு பிரச்சினையாக எண்ணிக் கொண்டிருக்கும் எனது தமிழ் மற்றும் பிறமொழி நண்பர்களுக்காக இதை எழுதுகிறேன்.

ஜல்லிக்கட்டு பற்றிய பிரச்சினையை ஆராய்வதற்கு முன், பிற மாநிலங்களில் இருந்து வரும் காளை தொடர்பான பிரச்சினைகளை தெரிந்து கொண்டால், ஜல்லிக்கட்டு ஒரு மாநிலப் பிரச்சினை மட்டும் அல்ல என்பது புரியும்.

குஜராத் நிலவரம்:
அதிக பால் தரும் அம்மண்ணின் கிர் வகைப் பசுக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருவதால், குஜராத் அரசு பிரேசில் நாட்டிலிருந்து கிர் எருதுகளின் விந்தை இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளது. இவ்வகை கிர் எருதுகள், பவநகர் மகாராஜா சுதந்திரத்துக்கு முன் பிரேசிலுக்குப் பரிசாக வழங்கிய எருதுகளின் பிறப்பின் வழி வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


கேரளா நிலவரம்:
ஜெர்சி மற்றும் சுவிஸ் நாட்டுக் காளைகளுடன் கலப்புப் புணர்ச்சியால், வெச்சூர் பசுக்கள் தங்கள் தனி/நற்தன்மையை இழந்து விட்டன.


பஞ்சாப் நிலவரம்:
பஞ்சாப் மாடு ஆய்வாளர்கள், பிரேசில் நாட்டில் உள்ள இந்திய வம்சாவழி மாடுகள் பற்றி ஆராய்வதற்கு பயணம் மேற்கொள்ளப் போவதாக ஒரு செய்தி வந்துள்ளது.

கர்னாடகா மற்றும் மகாராட்டிர மாநிலங்களின் தியோனி வகை மாடுகள் அழிவின் விளிம்பில் உள்ளன.


ஆக, இது மொத்த இந்தியாவுக்குமான ஒரு முக்கியப்பிரச்சினை என்று புரிகிறதல்லவா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg749W-Sx0ejwGfK7HTl1pfwe2RF6HJh3znseP0op2zvWMcEBf_r30aCSeE4OBCgSuo7lVTVwdhGro7CMR16hD9H4nS4AWOCRclQysDnPCrOVIA3Xsc16gG5fYg1pSl6tzfBex_lQ/s400/Jallikattu+bull+festival+%25283%2529.jpg

#ஜல்லிக்கட்டு என்பது ஒரு பாரம்பரிய நிகழ்வாக பண்டைய இந்து சமவெளி நாகரீகத்திலிருந்து தொடர்ந்து வருவதை இந்து நாளிதழ் இடுகை சுட்டிக் காட்டுகிறது.

A2 வகைப் பாலில் (இது இந்திய மற்றும் ஆப்பிரிக்க வகைப் பசுக்கள் தருவது) உள்ள புரதச்சத்தின் மேன்மை, நன்மைகள் A1  வகைப் பாலில் (இது ஜெர்சி மற்றும் கலப்புப் புணர்வில் பிறந்த பசுக்கள் சுரப்பது) இல்லை என்பதை இந்த  இடுகையை வாசித்தால் உணரலாம்

சரி, எதற்கு காளையுடன் மல்லு கட்ட வேண்டும்? அவற்றுக்கோ நமக்கோ வேறு வேலையில்லையா?

பசுக்களே பால் தருவதால், அதன் வழி பலன் இருப்பதால், ஒரு விவசாயி காளையை விட பசு வளர்ப்பதையே அதிகம் விரும்புவார் என்பது யதார்த்தமே. ஏர் உழவும், வண்டி இழுக்கவும் பயன்படும் காளைகள் ஆண் தன்மை நீக்கப்பட்டவை (அதனால் அவற்றைக் கட்டுப்படுத்துவது எளிது) என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், டிராக்டர்களும், எரிபொருள் வண்டிகளும் உள்ள காலத்தில், காளைகளை வளர்ப்பதில் பயன் எதுவும் இல்லை. விவசாயிகள் ஏன் அவற்றை வளர்க்க வேண்டும்? பரிசுகளுடன் கூடிய#ஜல்லிக்கட்டு ரேக்ளா பந்தயம் போன்றவை இருப்பதால், புணர்ச்சிக்கு வேண்டிய  நல்ல உடல் நலத்துடன் ஆன காளைகளை வளர்க்க, விவசாயிகளுக்கும் ஊக்கம் கிடைக்கிறதல்லவா! காளைகளை பந்தயத்துக்குத் தயார்ப்படுத்த விவசாயிகள் ஆண்டு முழுதும் அவற்றை நன்கு பராமரிக்கின்றனர்.  அதனால், முக்கியமான நன்மை விளைகிறது. #ஜல்லிக்கட்டு காளைகளுடன் புணர்வதால், பசுக்களின் வம்சாவழி கன்றுகள் ஆரோக்கியமும், வலிமையும் கொண்டவையாக பிறக்கின்றன.

சரி, விளையாட்டு என்று சொல்லிவிட்டு ஏன் காளைகளைத் துன்புறுத்த வேண்டும்?

#ஜல்லிக்கட்டு க்கென்று விதிகள் உண்டு. வாசிக்க:

விளையாட்டின் போது காளைக்கு (மனிதர்க்கு அல்ல) அடிபட்டால், விளையாட்டு உடனடியாக நிறுத்தப்படும். சில சமயங்களில் காளைகளுக்கு வெறி ஏற்ற மிளகாய் பொடி, சாராயம் பயன்படுத்தப்பட்டதை மறுக்க முடியாது. அது கண்டனத்துக்குரியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், 2008-லிருந்து, அரசுக் கட்டுப்பாடுகள் நிலுவைக்கு வந்த பின், மாவட்ட கலெக்டர் மற்றும் மிருக நல வாரிய உறுப்பினர்கள் முன்னிலையில் தான் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டுக் காளைகளின் மற்றும் போட்டியில் பங்கு பெறுபவர்களின் உடல் நலம் குறித்து மருத்துவர்கள் ஆய்ந்து சான்றிதழ் வழங்கிய பின்னரே இது நடைபெறுகிறது.

எல்லாம் சரியாகவே உள்ளது. பின் ஏன் #ஜல்லிக்கட்டு க்குத் தடை?

இந்தியாவின் பால் சந்தை நமது சர்க்கரைச் சந்தையை விட பெரியது என்பது ஒரு தகவல்! 125 கோடி மக்கள் தொகை உடைய, 50% மாமிசம் உண்ணாத மக்கள் கொண்ட ஒரு நாட்டில், புரதம் என்பது பால் என்பதிலிருந்து தான் வரவேண்டும். மேற்கத்திய நாடுகள் இந்தச் சந்தை வாய்ப்பை உணர்ந்து கொண்டன. மஞ்சள், மிளகுக்கு அமெரிக்கா காப்புரிமை வைத்துள்ளதைத் தொடர்பு படுத்திப் பார்த்தால், அந்த நாடுகளின் நோக்கம் எளிதாகப் புரியும்.

ஆம், அயல் நாட்டுச்சக்திகள் சரியான திட்டமே வகுத்துள்ளன. இத்தகைய ஜனத்தொகை கொண்ட ஒரு நாடு, பாலுக்குத் தங்களை நம்பி இருக்கும் சூழ்நிலையை உருவாக்குவதே அவர்களின் “சீரிய” திட்டம். பாலுக்குக் காப்புரிமை பெற இயலாது. வேறென்ன செய்யலாம்? இந்திய மண்ணின் பாரம்பரிய இனக் காளைகள்-பசுக்களின் சேர்க்கையை இல்லாமல் ஆக்குவது. இதை இன ஒழிப்பு (Genocide) என்று கூடச் சொல்லலாம்.  ஆக, மண்ணின் காளைகள் மொத்தமாக அழியவேண்டும் என்பதே குறிக்கோள்.

இதற்காக, ஆலோசித்து இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுத்தனர்.

1.  மண்ணின் எருதுகளின் பயன்களை விவசாயிகளுக்கு இல்லாமல் ஆக்குவது என்பது ஒரு எளிய வழி. பொருளாதார வழிவகை இல்லாத நிலையில் விவசாயிகள் காளைகளை பராமரிக்க இயலாதில்லையா? முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். இந்தியாவின் 68% பாரம்பரிய இனக் காளைகள் சிறு விவசாயிகளிடம் உள்ளன. இவ்வழியில் இவர்களே அயல் நாட்டுச்சக்திகளின் இலக்கு.

2. அதிக (ஆனால் A1 வகை) பால் தரும் ஜெர்சி பசுக்களை விற்பதாக விவசாயிகளுக்கு ஆசை காட்டுவது ஒரு வழி. மெல்ல இந்த ஜெர்சிப் பசுக்கள் பாரம்பரிய இனப் பசுக்களுக்கு பெருமளவில் மாற்று எனும் நிலை வரும்போது, ஜெர்சி இனக் காளைகளின் விந்துக்கு (செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்க) மேற்கத்திய நாடுகளையே அண்ட வேண்டிய சூழல் உருவாகி விடும். அவர்கள் சொல்வது தான் விலை. அந்த நாடுகளை அண்டிப் பிழைக்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவோம் என்பதில் ஐயமில்லை.  இந்த ஏற்பாட்டுக்கு ஏதுவாக, வெண்புரட்சி (White Revolution) என்ற பெயரில், நமது மத்திய/மாநிலஅரசாங்கங்கள் துளியும் சிந்திக்காமல் செயல்படுகின்றன.

இவ்வழியில், நமது பால் சந்தையை மேற்கத்திய நாடுகள் கைப்பற்றுவதுடன், A1 ரக பால் ஏற்படுத்தும் மருத்துவப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டி, மருந்து தயாரிக்கும் பன்னாட்டு கம்பெனிகளை நாம் சார்ந்திருக்க வேண்டிய அபாயமும் உள்ளது, அவர்களுக்கோ மற்றுமொரு பணம் ஈட்டும் வாய்ப்புக்கான வழி பிறக்கிறது.

முடிவு என்ன?

இந்த 2 இடுகைகளின் (இடுகை1 இடுகை2) சாராம்சமான செய்தி, நமது பாரம்பரிய இனப் பசுக்கள் மற்றும் காளைகளின் பேரழிவு, என்பது தான்.

#ஜல்லிக்கட்டு என்ற பாரம்பரிய விளையாட்டை, தமிழ் பண்பாட்டுக் கூற்றை தடை செய்வதால் ஏற்பட வல்ல பாதகத்தை, முடிந்த அளவில் இவ்விடுகையில் கூறியிருக்கிறேன். பலரும் வாசித்து புரிதல் பெற, இவ்விடுகையை, முடிந்த அளவு பகிரவும். மேலும், இது தமிழர் சார்ந்த பிரச்சினை மட்டுமே அல்ல என்பதையும் புரிந்து கொள்க. ஆங்கில டூலாவையும் விரிவாகப் பகிர்தல் நல்லது.

#SaveJallikattu #NotJustForTamilnadu

நன்றி

--- எ.அ.பாலா

Wednesday, February 03, 2016

லாங் லாங்கர் லாங்கஸ்ட் By டீக்கடை எனும் @teakkadai

 டிவிட்டர் நண்பர் @teakkadai (https://twitter.com/teakkadai) அவர்களின் எழுத்துகளின் ரசிகன் நான். மிக நேர்த்தியாக, யதார்த்தமாக அதே நேரம் எளிமையாகவும் எழுதுபவர். சமீபத்தில் ஒரு சிறுகதையை டிவிட்லாங்கரில் பதிப்பித்திருந்தார்.  அதை உங்கள் வாசிப்புக்கு என் வலைத்தளத்தில் பகிர்கிறேன்.  கதைக்கு அவர் தலைப்பு இடவில்லை. ஆகவே, கதைத் தலைப்பு மட்டும் என்னுடையது.
--எ.அ.பாலா

லாங் லாங்கர் லாங்கஸ்ட் - By @teakkadai

மதியத்தூக்கம் கலைந்து மாடியில் இருந்து கீழிறங்கி வந்தேன். வீடு வழக்கத்துக்கு மாறாக சத்தம் ஏதுமில்லாமல் இருந்தது. அம்மாவும், மனைவியும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். டீ வேண்டுமா எனக் கேட்ட அம்மாவிடம் ம் என்று சொல்லிக்கொண்டே திவ்யா எங்கே? என்று கேட்டேன். ”அவ எல்லாப் பிள்ளைகளையும் கூட்டிக்கிட்டு நம்ம பழைய தெருவுக்கு போயிருக்கா” என்றார். தங்கை திவ்யாவும், நானும் ஒவ்வொரு வருடம் பொங்கல் விடுமுறையிலும் ஊருக்கு வருவதை வழக்கமாக்க் கொண்டவர்கள்.

சிறிது நேரம் கழித்து பிள்ளைகளுடன் திரும்பி வந்த திவ்யா, ”ராதிகாவைப் பார்த்தேன். ஆளே உருக்குலைஞ்சு போயிட்டா, முடியெல்லாம் கொட்டி, இருக்குற முடியும் வெள்ளையாகி, கூன் விழுந்து பார்க்கவே பாவமா இருந்துச்சு என்றாள். பாவம் என்ன செய்யுறது என்று சொல்லியபடியே வெளியே கிளம்பினேன்.

பிறந்த ஊர் என்றாலும் நாங்கள் இப்போது இருக்கும் பகுதி அவ்வளவாக எனக்கு பழக்கம் இல்லாத ஒன்று. எதிர்ப்படுபவர்கள் யாரையும் அடையாளம் தெரியவில்லை. கால் போனபடி நடந்து கொண்டிருக்கும் போது ராதிகாவின் நினைவு வந்தது.

ராதிகா, நாங்கள் முன்பு குடியிருந்த வீட்டிற்கு எதிர்வீட்டில் குடியிருந்த பெண். சுற்று வட்டாரத்தில் பிரபலமான ரைஸ்மில் ஒன்றை ராதிகாவின் அப்பா நடத்தி வந்தார். நானும் ராதிகாவும் தொடக்கப்பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். ஆறாம் வகுப்பின் போது அவள் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கும், நான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் மாறினோம். அவளது அண்ணன் அவளைவிட ஏழு வயது மூத்தவன், அவன் அப்போது வெளியூர் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்தான். ராதிகாவின் தந்தையும் அவரது பங்காளி வகையறாக்களும் பெரிய ஆசாடபூதிகள். வீட்டு விலக்கான பெண்கள் கையால் தண்ணீர் வாங்கிக்கூட குடிக்க மாட்டார்கள்.

அவர்கள் வீட்டிலேயே கொல்லைப்புறம் அருகே ஒரு பெரிய அறையையே அந்த நாட்களில் தங்குவதற்காக கட்டி வைத்திருப்பார்கள். தட்டு டம்ளர் முதல் போர்வை தலையணை வரை கிட்டத்தட்ட ஒரு லாட்ஜ் அறையைப் போலவே அது இருக்கும். அந்த அறையில் உபயோகப்படுத்தவென்றே ஒரு ட்ரான்ஸிஸ்டர் கூட பிரத்யேகமாக அங்கே இருக்கும்.
Drawing courtesy: Anikartick

எனவே ராதிகாவின் அம்மா வீட்டு விலக்கான நாட்களில் ராதிகாவின் அண்ணன் தான் ஹோட்டலில் இருந்து பார்சல் வாங்கிக்கொண்டு வருவான். அவன் ஹாஸ்டலுக்குச் சென்ற பின்னால் அந்த வேலை என் தலையில் விழுந்தது. கொண்டு செல்லும் பாத்திரங்களை வைத்தே ரைஸ்மில் காரருக்கா என ஹோட்டலில் கேட்டு பார்சல் தருவார்கள். ராதிகா சகஜமாக, எங்க அம்மா, லாங் என்று சொல்வாள். இது சில வருடம் நீடித்தது, எட்டாம் வகுப்பு முழுப்பரிட்சை லீவில் ராதிகா பெரிய பெண் ஆனாள். அதன்பின் எனக்கு அந்த வீட்டிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னர் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள், டியூசனில் இருந்து வீடு திரும்பியவுடன், அம்மா என்னிடம் “ரைஸ்மில் காரம்மா வந்திருந்தாங்க, ஏதோ நோட்ஸ் எல்லாம் ராதிகாவுக்கு வேணுமாம்” என்றார். அவள் தந்தை அவளை டியூசனுக்கு அனுமதிப்பதில்லை மேலும் மாத விலக்கான நாட்களில் அவள் பெரும்பாலும் பள்ளிக்குச் செல்வதில்லை என்பதால் என்னுடைய டியூசன் நோட்ஸை கேட்டிருந்தாள். என் தங்கையின் மூலம் நோட்ஸ் அவள் வீட்டிற்குச் சென்றது.

இந்நாட்களில் ராதிகாவின் அண்ணன் சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் வீட்டில் உடல்நிலை சரியில்லாத நாட்களில் வேறுவழியில்லாமல் கடைகண்ணிக்குச் செல்ல என்னையே மீண்டும் அவர்கள் நம்பவேண்டியிருந்தது. தொடர்ந்து ராதிகாவிற்கும் பிளஸ்2 நோட்ஸ், ரெக்கார்டு நோட் என என் தயவு பெரிதும் தேவைப்பட்ட்து. தெருப்பையன்கள் எல்லாம் அவளுக்கு உன்மேல லவ்வு என்றெல்லாம் ஏத்தி விடுவார்கள். சொந்த ஜாதியில் இருக்கும் ரைஸ்மில் வேலைக்காரர்களை கூட வீட்டில் அனுமதிக்காத ராதிகாவின் அப்பா என்னை அங்கே புழங்க விட என் மீதுள்ள நம்பிக்கைதான் காரணம் என்பதால் நான் அதை சிரித்துக் கொண்டே கடக்க பழகியிருந்தேன்.

பிளஸ் 2 முடித்ததும் கல்லூரிக்கும் அனுப்ப ராதிகாவின் தந்தைக்கு இஷ்டமில்லை. ஆனால் அவரின் உறவினர்கள், நம்ம ஆட்கள்ல இப்ப படிச்ச பிள்ளைகளைத்தான் கட்டுறாங்க எனச் சொல்லி கல்லூரிக்கு அனுப்ப வைத்தனர். எங்கள் ஊரில் கல்லூரி இல்லாததால் வெளியூர் கல்லுரிக்கு அனுப்பி வைத்தனர்,அங்கே விடுதியில் தங்கிப் படித்தாள். இன்னொரு கல்லூரியில் நானும்.

ராதிகா இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, அவள் அண்ணனுக்கு ஒரு மிகப்பெரிய இடத்து சம்பந்தம் வந்தது. அவள் அப்பா கூட, முதல்ல பொண்ணு கல்யாணம் அப்புறம் தான் பையனுக்கு என்று பிடிவாதம் பிடித்துப் பார்த்தார். ஆனால் அவரின் உறவினர்கள் வற்புறுத்தி சம்மதிக்க வைத்துவிட்டார்கள். கல்யாணத்தின் போது பச்சைப் பட்டுப்பாவாடையும், மாம்பழக் கலர் தாவணியும், ஒற்றை ஜடையுடன், நீண்ட மெல்லிய டாலர் செயினுடன் வளைய வந்த அவளைக் கண்ட உறவினர்கள் எங்க பையனுக்குத்தான் உங்க பொண்ணைக் கொடுக்கணும் என்று சண்டையே போட்டார்கள். பந்தி பரிமாறுதலில் ஈடுபட்டிருந்த என்னை அவள் அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்தாள் என நண்பர்கள் சொல்ல அதை வழக்கம் போல நான் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

ராதிகாவின் அண்ணன் சென்னையில் செட்டில் ஆகியிருந்தான். நானும் படிப்பு முடிந்து சென்னையில் ஓராண்டு போராடி ஒரு வேலையில் அமர்ந்தேன். என்ன இன்னும் ராதிகாவின் திருமண செய்தி வரவில்லையென யோசிக்கத் தொடங்கியிருந்தேன். ஊருக்கு வந்தபோது, ஸ்வீட் வாங்கிக் கொண்டுபோய் வேலை கிடைத்த விபரத்தை ராதிகா வீட்டாரிடம் சொன்னேன். வீடே களையிழந்து கிடந்த்து. அம்மாவிடம் கேட்ட போது அதெல்லாம் உனக்கெதுக்கு என்று கடிந்து கொண்டார்,

பின்னர் விஷயம் தெரியவந்தது. ராதிகாவிற்கு மாதவிலக்கானது மூன்று, நான்கு நாட்களில் முடியாமல் ஒரு வாரம் பத்து நாள் வரை நீண்டதாம். அதனால் உடல்நிலை தளர்ந்து போனாளாம். தொடர்ந்து வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.

இன்னும் ஒரு வருடம் போனது. ராதிகாவின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்னும் இளைத்துப் போயிருந்தாள். அவள் வீட்டிற்குச் சென்றபோது லாங்,லாங்கர், லாங்கஸ்ட் ஆயிடுச்சுடான்னு விரக்தியாகச் சிரித்தாள்.

இந்த விசயம் அரசல் புரசலாக வெளியில் தெரிந்ததால் அவர்களுக்கு ஈடானவர்கள் யாரும் சம்பந்தம் பேசவரவில்லை. வசதி குறைவானவர்களோ மாசம் பாதிநாள் அவ படுத்துக்கிட்டானா யாரு வேலையெல்லாம் பார்க்கிறது, தங்க ஊசின்னு கண்ணுல குத்திக்க முடியுமா என ஒதுங்கிக் கொண்டார்கள். ராதிகாவுக்கு 25 வயது ஆன நிலையில் அவர் அம்மா தெருவில் ஒருநாள் எந்த ஜாதின்னாலும் பரவாயில்லை, கேட்டா முடிச்சிடலமுன்னு இருக்கோம் என்று ஜாடை மாடையாக்கூட சொல்லிக் கொண்டிருந்தாராம்.

அந்நேரம் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியிருந்தோம். லோன் மூலம் வீடுகட்டி முடித்திருந்த நிலையில் நாங்கள் இப்போதிருக்கும் வீட்டிற்கு மாறியிருந்தோம். அதன்பின் தங்கை கல்யாணம், என் கல்யாணம், பிள்ளைகள், சென்னை வாழ்க்கை என அந்த தெருவில் இருந்தே ஒதுங்கி விட்டோம்.

வீடு திரும்பிய பின்னரும் ராதிகாவின் நினைவுகளால் மனம் அலைந்தது. அவள், ஹாலில் மாட்டியிருந்த தன் அண்ணனின் திருமணத்தில் எடுத்த போட்டோவை வெறித்தபடியே என்னிடம் பேசியது ஞாபகம் வந்தது. மாடி காலியிடத்தில் நிலை கொள்ளாமல் உலாத்திக் கொண்டிருந்த போது தங்கை வந்தாள். சில நிமிடம் மௌனமாய் இருந்த அவள், நீ அவள கல்யாணம் பண்ணுவேன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஏன் நீ எந்த ஸ்டெப்பும் எடுக்கலை? என்றாள். உங்கண்ணன் மகனான்னு கேட்டு பாசமா தலையத் தடவிக் கொடுத்தா, உன் பேரைச் சொல்லும் போது அவ கண்ணுல இன்னும் காதலப் பார்த்தேன் என்றாள்.

இல்ல, அப்ப உன் கல்யாணம்தான் எனக்கு பெரிசாப் பட்டுச்சு. பணத்துக்காக வேற ஜாதியில கல்யாணம் பண்ணிட்டான்னு இல்ல ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டான்னு உன் புகுந்த வீட்டுல நீ பேச்சுக் கேட்கக்கூடாதுன்னு நெனச்சேன் என்றேன். கண்கள் பனிக்க என்னைப் பார்த்தபடி இறங்கிப் போனாள் என் தங்கை. இரவில், மனைவி, என்னிடம் திவ்யா சொல்றதுல்லாம் உண்மையா? எனக் கேட்டாள்.

சேச்சே, சும்மா அவள திருப்திப்படுத்த சொன்னேன். உண்மையச் சொல்லணும்னா எனக்கு சின்ன வயசில இருந்தே என் மனைவி இந்த உயரம் இருக்கணும், முகம் இப்படி இருக்கணும், இந்தக் கலர் இருக்கனும்னு கனவு கண்டுக்கிட்டு இருந்தேன். அப்படியே நீ இருந்த, அதனால தான் உன்னைய கட்டிக்கிட்டேன் என்றேன். காதலாய் பார்த்தாள்.

காலையில் வாக்கிங் போகும் போது அப்பாவும் உடன் வந்தார், என்னடா திவ்யா சொன்னது உண்மையாடா? உனக்கு ஒரு அபிப்ராயம் இருந்தா சொல்லி இருக்கலாமேடா? என்றார். நான் உடனே அப்பா நீங்க எங்களுக்காக ரொம்பக் கஷ்டப்பட்டுட்டீங்க, நோயாளி பொண்ணக் கட்டி உங்களுக்கு இன்னும் சிரம்ம் கொடுக்கக் கூடாதுன்னுதான் அதப் பத்தியே யோசிக்கலை என்றேன். என்னை பெருமையாகப் பார்த்தன அவர் கண்கள்.

வீடு திரும்பி, குளிக்கும் போது, பாத்ரூம் கண்ணாடியில் தெரிந்த என் முகம், ஆளுக்கு தகுந்த படி பொய் சொன்னாயே, காமுகா, மாதம் பாதி நாளு தூரமாகிறவளால எவ்ளோ சுகம் கிடைச்சிடும்னு கணக்குப் பண்ணித்தான அவாய்ட் பண்ணுன? எனக்கேட்க குற்ற உணர்ச்சி தாங்காமல் ஷவருடன் சேர்ந்து அழத்தொடங்கினேன்.
**********************************************************

Thursday, August 28, 2014

நீயா நானா? - மருத்துவர் மேல் பாய்ச்சல்


நீயா நானா? - மருத்துவர் மேல் பாய்ச்சல்

தொழிலில் உள்ள எல்லா பொறியாளர்களுமே நல்ல பொறியாளர்களா எல்லாருமே நல்ல ஆசிரியர்களா? அது போலத் தான் மருத்துவத்துறையும் அங்குமிங்கும் குற்றம் குறை இருக்கத் தான் செய்கிறது. எனக்குத் தெரிந்து, ஒரு ஐடி கம்பெனியில் பணிக்குச் சேர்ந்த ஒன்றிரண்டு வருடத்தில், ஒரு பையனோ பெண்ணோ ஆன்சைட் வாய்ப்பு கிடைக்குமா என்று தான் பார்க்கிறார்கள். அது அமெரிக்காவுக்கு சேவை செய்ய எல்லாம் இல்லை, பணம் ஈட்டத் தான். மனித உபாதைகளையும் நோய்களையும் குணப்படுத்துவதால் அல்லது உயிரைக் காப்பாற்றுவதால் மருத்துவத்துறைக்கு சமூகத்தில் உயரிய இடமளிக்க வேண்டும் என்ற விவாதத்துக்குள் செல்வதில் எந்தப் பயனுமில்லை.

Medicine is also a profession like others.  மேலும் வணிக நோக்கு (அல்லது பொருள் சார்பு -materialism) மிகுந்திருக்கும் காலச்சூழலில், மருத்துவத்துறையிலும் அதன் தாக்கம் இருப்பது இயல்பானதே.  பொதுவாக ஆசிரியர்கள், மருத்துவர்கள் என்ற இரு தரப்பினரையும் சற்று உயர்வான இடத்தில் நம் சமூகம் பல காலமாக வைத்து வந்துள்ளது. அவர்களின் குறைபாடுகள் சற்று தீவிரமாக பார்க்கப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கியக்காரணம். ஒரு 30-35 ஆண்டுகளுக்கு முன் அவை இரண்டும் மேன்மை (Nobility என்ற பொருளில்) மிக்க தொழில்களாக, சேவையாக கருதப்பட்டன. இப்போது அது சீரியஸாக கேள்விக்குள்ளாகி வருகிறது, வருத்தமான விஷயம் தான். நிற்க.

மருத்துவத்துறை சார் பிரச்சினைகளை/குறைபாடுகளை ஆராய்ந்து களையவேண்டிய கடமை மருத்துவர்களுக்கும், அரசுக்கும், சமூகத்திற்கும் என்று எல்லாருக்கும் உள்ளது என்பதை உணர்தல் அவசியம்.  விஜய்டிவியில் சமீபத்தில் ஒளி”பரபரப்பான” ”நீயா நானா” நிகழ்ச்சி கொண்டு செல்லப்பட்ட விதமும், அதில் நடந்தேறிய Gimmicks-ம் டி.ஆர்.பி எகிறுவதற்கு பயனளித்திருக்குமே அன்றி, அதில் சமூக நோக்கு உள்ளது என்று ஒப்புக் கொள்வது கடினம். மருத்துவத்தொழில் மீது வைக்கப்படும் முக்கியப் புகாரான அலட்சியப்போக்கை (Negligence) கண்டறிய/எதிர்கொள்ள சுமுகமாக முறையில் வழிவகை காணப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, வேறு விஷயம்.

ஒரு கேள்வி கேட்டு விட்டு எதிர்தரப்பு பதிலை முடிக்கும் முன்னே குறுக்கீடு என்பது, அப்பட்டமான சார்பு தெறிக்கும், அர்னாப் ஸ்டைல் விவாதமேடை, அதனால் துளியும் பயன் இல்லை. மாஸ்டர் ஹெல்த் செக்  (MHC) என்பதை விளக்கக் கூட விடாமல், ”மாஸ்டர்” என்ற சொல் இருப்பதால், அது அனைத்து வகையான பரிசோதனைகளையும் உள்ளடக்கிய ஒன்று போலத் தோற்றமளிப்பதாகக் கூறுவது, உளறுதல் அல்லாமல் வேறென்ன?  நல்லவேளை, ”மாஸ்டர்” ஹெல்த் செக் என்பதை சரக்கு மாஸ்டர் அல்லது ஹெட்மாஸ்டருக்கு மட்டுமே செய்யவேண்டும் என்று மருத்துவர் மேல் பாய்ந்த சிலபல கனவான்களில் யாரும் சொல்லவில்லை ;-)

மருத்துவர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுவதின் வாயிலாக யதார்த்தத்தில் பிரச்சினைகளை முறையாக அலச முடியுமா, தீர்வை அணுகத்தான் முடியுமா ? தொடர்பில்லாமல் அவரவர் ஏதேதோ பேசுவதை விடுத்து, மருத்துவத்துறை சார்ந்த 3-4 முக்கியப்பிரச்சினைகளை கையில் எடுத்து, இரு தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்து, ஆரோக்கியமான முறையில் அவற்றின் தாக்கங்களையும், தீர்வுகளையும் முன் வைப்பதே, சமூகப்பிரச்சினைகளை  அலசி ஆராய்வதாகக் “காட்டி”க்கொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு அழகு! இதையெல்லாம் மருத்துவத்துறையை விட பல மடங்கு வணிக நோக்கமும், அப்பட்ட சார்பு நிலை பற்றி துளியும் கவலையில்லாத டிவி மீடியாவில் எதிர்பார்க்கலாமா என்று யாராவது கேள்வி கேட்டால் நான் அம்பேல்!

மேற்கூறிய நிகழ்ச்சியில் மருத்துவரை மட்டம் தட்டவேண்டும் என்ற சார்பு நிலையுடன், அதிபுத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு ஆவேசப்படுவதும், ஒரு isolated incident-ஆல் (இன்னும் சிலவும் இருக்கலாம் தான்) பாதிக்கப்பட்டவரை முன்னிறுத்தி ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பையும் காழ்ப்பையும் உண்டாக்கி குளிர்காய்வதும், ’நீயாநானா’ இன்னும் பிரபலம் அடைவதற்கும், கோபிநாத்தின்  “சமூகக்காவலர்” இமேஜை செம்மைப்படுத்தவும் நிச்சயம் உதவலாம்! ஏதோ ஒரு கோவை(?) மருத்துவமனையின் அலட்சியப்போக்கால் பாதிக்கப்பட்ட அப்பெற்றோருக்கு ”உரிய நீதி” கிடைக்க, கடைசி வரை விஜய்டிவியும், ”நீயாநானா” குழுவினரும் துணை நிற்கப் போகிறார்களா என்று யாராவது கேட்டுச் சொல்லவும்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாலும், சிலபல “நீயா நானா” நிகழ்ச்சிகளில் “அனைத்தும் யாம் அறிவோம்” என்ற தொனியை காண முடிந்தது.  மருத்துவருக்கு எதிரான நிகழ்ச்சியில் அத்தொனியும், blatant-ஆன சார்பும் சற்று தாங்கமுடியாமல் இருந்ததால், சுட்டிக்காட்டவேண்டும் என்று தோன்றியது! Master Health Check தேவையற்றது என்று குரல் கொடுத்தது போல, சினிமா தியேட்டர்களில் MRP-க்கு 5-6 மடங்கு விலையில் தின்பண்டங்கள் விற்கப்படும் அநியாயத்திற்கு எதிராகவும் “நீயா நானா” குரல் கொடுத்தால், பொதுமக்களுக்குப் புண்ணியமாப் போகும்.  மல்டிபிளக்ஸ்களில் சினிமா டிக்கெட்டுக்கும், அங்கு விற்கப்படும் ஜங்க் ஃபுட்ஸ், குளிர்பானங்களுக்கும் சாமானிய மக்கள் அடிக்கடி கொட்டிக் கொடுக்கும் பணத்திற்கு, அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை அடிப்படை உடல்நலப் பரிசோதனை செய்து கொள்வது ஒன்றும் அத்தனை மோசமான விஷயமாகத் தோன்றவில்லை.

(அந்த நிகழ்ச்சியில்) எவ்வளவு அராஜகம் பண்ணியிருந்தால், ஒரு டாக்டர் இப்படி (கீழுள்ள லிங்க்கில் சுட்டப்பட்டிருக்கும் ஆடியோ!) பொங்கியிருப்பார் என்று யோசியுங்கள்! One needs to understand that Response will always be proportionate to one's behavior in a TV Show!

Friday, November 01, 2013

பெருமாள் பெயரில் ஒரு நூதனத் தீண்டாமை!



’பெருமாளுக்குத் தீட்டு’ புகழ் தேவநாத சுவாமி கோயிலில் (கடலூர் மாவட்டம், திருவந்திபுரம்), இன்னொரு மகாஅவலம் பல ஆண்டுகளாக நடந்தேறி வந்திருந்தாலும், இப்போது தான் அது கலெக்டர் (மனு வடிவில்) வரை சென்றுள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்! இக்கோவிலுக்கு அருகில், ”குரு பரம்பரை”யின் கடை ஆசார்யரான மணவாள மாமுனிகளுக்கு கோயில் ஒன்றுள்ளது.   பல ஆண்டுகளாக, ஐப்பசி மாதம் நடைபெறும் மாமுனிகளின் உத்சவ சமயம், அவரது விக்ரகத்தை வீதி ஊர்வலமாக எடுத்து வரும் வழக்கம் உள்ளது.  மாமுனிகளின் விக்ரகம் தேவநாத சுவாமி கோயில் முன் வருகையில், கோயில் கதவு மூடப்பட்டு விடும்.  அதாவது பெருமாள் மணவாள மாமுனிகளை பார்த்தால், பெருமாளுக்குத் தீட்டும் தோஷமும் ஏற்பட்டு விடுமோ என்னவோ?!?!

வைணவ திவ்யதேசமான தேவநாத சுவாமி ஆலயம் வடகலை சம்பிரதாயக் கோயில், மணவாள மாமுனிகள் தென்னாச்சார்ய வழி ’குரு பரம்பரை’யின் கடைசி குரு.  உடையவர் இராமானுஜரின் அவதாரமாகவும் (ஏராரும் எதிராசன் என உதித்தான்) அரங்கநாதர்க்கே குருவாகவும் கருதப்படுபவர்.  அதாவது, பெருமாளில் தொடங்கி, மாமுனிகளில் முடியும் குரு பரம்பரையானது ’ஆச்சார்ய ரத்தின மாலை போன்றது.  மாமுனிகள் வைணவம் சார்ந்த பல சிறந்த கிரந்தங்களை இயற்றியுள்ளார்.

கோயில் கதவுகளை மூடி,   வைணவம் தழைக்க வந்த ஒரு பெருந்தகையை இப்படி அவமானப்படுத்துவது கூட ஒரு வகையான தீண்டாமையே என்றும், மணவாள மாமுனிகள் ஊர்வலம் செல்கையில் பெருமாள் கோயில் கதவுகளை மூடக்கூடாது என்றும் ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரட்சண சபையின் தலைவர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசரும், இன்னும் சிலபல பக்தர்களும் கலெக்டரிடம் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர், இந்த ஆண்டு கோயில் கதவுகள் மூடப்பட்டால், நீதிமன்றத்துக்கு செல்லப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

அப்படியும், இந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதியன்று கலை 9 மணி அளவில், மணவாளமாமுனிகள் விக்ரகம், ஊர்வலமாக தேவநாத சுவாமி கோயிலைக் கடக்கையில், கோயில் கதவுகள் மூடப்பட்டன.  இரு தரப்பினருக்கும் இடையே பலத்த வாக்குவாதமும் நிகழ்ந்து போலீஸ் வந்து அமைதிபடுத்த வேண்டியிருந்தது. கோவிலுக்கு வந்த பொது மக்கள் அதிர்ந்து போய் இதை கவனித்துக் கொண்டிருந்தனர்.  கோயில் பணியாளர்கள் இருவர், இந்த அவலக் கூத்தை புகைப்படம் எடுத்த பத்திரிகை சார்ந்த புகைப்படக்காரர்களை மிரட்டி, அவ்விடத்தை விட்டு துரத்த முயன்றுள்ளனர். 

இவை எல்லாவற்றுக்கும் உச்சம், கோயில் தலைமை அதிகாரி, “மணவாள மாமுனிகள் ஊர்வலத்தின்போது கோயில் கதவுகளை மூடுவது என்பது தொன்று தொட்டு நடந்து வரும் ஒரு சம்பிரதாயம் (கடவுளே, கடவுளே, கடவுளே!!!!!) இந்த சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் அனாவசியமாக இதை ஒரு பிரச்சினை ஆக்கியிருக்கிறார்” என்று சொல்லியிருப்பது தான்!

இவர் போன்ற ஆட்களையும், அண்ணல் இராமானுஜர் போதித்த வைணவத்துக்கு உரித்த விரிந்த நோக்கமும், அடக்கமும், புரிதலும், அடியார்க்கு அடியராய் இருக்கும் பண்பும் அறவே இல்லாத இந்த கோயில் அர்ச்சகர்களையும்அந்த தேவநாதப் பெருமாள் கூட திருத்த முடியாது!!!

வடகலையாருக்கு மணவாள மாமுனிகள் ஆகாமல் போனதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது. அது சற்றே நீண்ட சமாச்சாரம் என்பதால், விவரமாக அடுத்த இடுகையில் சொல்கிறேன்.  பொறுத்திருக்கவும்.

எ.அ.பாலா

பிற்சேர்க்கை: இதை வடகலை vs தென்கலை சண்டை சச்சரவாக மட்டும் எடுத்துக் கொள்ள இயலாது.  ஏனெனில், பார்ப்பனர் அல்லாத வைணவர் பலரும், இராமானுஜரைப் போலவே, மணவாள மாமுனிகளையும் வழிபாட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய, வைணவம் தழைக்க அவதரித்த, ஒரு மகானாகவே கருதி, பல வைணவ திவ்ய தேசங்களில் நடைபெறும் மாமுனிகளின் திருநட்சத்திர வைபவத்தில் கலந்து கொள்கின்றனர்.

Monday, June 10, 2013

கல்விக்கு உதவி வேண்டி பணிவான வேண்டுகோள்

கல்விக்கு உதவி வேண்டி பணிவான வேண்டுகோள்
 
அன்பான நண்பர்களுக்கு / வாசகர்களுக்கு:

தமிழ் வலையுலக நண்பர்கள் / வாசகர்கள் ஆதரவோடு, கௌசல்யா என்ற ஏழை மாணவி மருத்துவக் கல்வியை முடித்து, இன்று டாக்டர் கௌசல்யாவாக உருவாகியிருப்பது, மிக்க பெருமையான ஒரு விஷயம். விவரங்கள்  இங்கே காணக் கிடைக்கும்.

http://balaji_ammu.blogspot.in/2006/09/blog-post.html
http://balaji_ammu.blogspot.in/2006/09/kausalya.html
http://balaji_ammu.blogspot.in/2010/08/565.html

அது தவிர, இன்னும் சிலபல சமூக உதவி சார் முயற்சிகளுக்கும், உங்களில் பலர் ஆதரவும், ஊக்கமும் அளித்து வந்துள்ளீர்கள். இவை அனைத்துக்கும் என் பணிவான நன்றிகள்.

சமீபத்தில், டாக்டர் கௌசல்யாவின் ஊரில் (அந்தியூர்) பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ள ஒரு ஏழை மாணவரின் தந்தையிடமிருந்து அவனது மேற்படிப்புக்கு உதவி கேட்டு ஒரு வேண்டுகோள் வந்துள்ளது. அதையும், மாணவனின் கல்விச் சான்றிதழ்களையும், உங்கள் உதவியை பணிவுடன் நாடி, உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.









மிகுந்த சிரமங்களுக்கு இடையில் அயராது உழைத்து, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 481 மதிப்பெண்களும், தற்போது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200க்கு 1147 மதிப்பெண்களும் அம்மாணவன் பெற்றிருக்கிறான். பொறியியல் கல்வி பயில மிக்க ஆர்வமாக இருக்கிறான். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில், 200க்கு 197.5 மதிப்பெண்கள் இருப்பதால், நல்லதொரு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்க பிரகாசமான வாய்ப்பிருப்பதை உணர்கிறேன்.

பொருளுதவி செய்ய விரும்பும் அன்பர்கள் என்னை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறேன் அல்லது இங்கே பின்னூட்டத்தில் உங்கள் மின்மடல் முகவரியை இட்டால் கூட போதுமானது. பிறகு பொருளுதவி செய்வதற்கு வேண்டிய விவரங்களை மின்மடல்வழி தருகிறேன். உங்களால் இயன்றதை அளித்து உதவுங்கள்.

balaji_ammu@yahoo.com

நன்றியுடன்
எ.அ.பாலா

Saturday, May 04, 2013

அயர்லாந்து, அம்பானி, சீனா மற்றும் சில

அயர்லாந்து, அம்பானி, சீனா மற்றும் சில

1. 6 மாதங்களுக்கு முன், அயர்லாந்தின் கருக்கலைப்புத் தடைச் சட்டத்தின் காரணமாக, சவீதா என்ற இந்தியப் பெண் அநியாயமாக உயிரிழந்தது நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்து, அங்கு கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்தியாவைப் போல, கூச்சல் போட்டு விட்டு விஷயத்தை சௌகரியமாக மறந்து விடாமல், அங்குள்ள அரசு, அயர்லாந்து தீவிர கத்தோலிக்க நாடாக இருந்தும், அச்சட்டத்திற்கு சில திருத்தங்களை கொண்டு வர இருப்பது வரவேற்கப்பட வேண்டியது. இதற்கு எதிர்ப்பாளர்கள் இருப்பினும், அங்குள்ள பெரும்பான்மை மக்களின் மனித நேயமும், நேர்மையும் பாராட்டத்தக்கது,

2. இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானிக்கு மகாராட்டிர அரசு, மக்கள் வரிப்பணத்தில் Z+ வகை பாதுகாப்பு வழங்கியிருப்பதை, சுப்ரீம் கோர்ட் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. சாமானியனுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலையும், தில்லியில் ஒரு 5 வயது சிறுமி அநியாயமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதையும் கோர்ட் சுட்டிக்காட்டியிருக்கிறது. பணக்காரர்கள் தனியார் பாதுகாப்புக்கான விலையை எளிதாக கொடுக்க இயலும் என்றும் கோர்ட் கூறியிருக்கிறது. கோடிகளில் புரளும் அம்பானி, மக்கள் பணத்தில் தனக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று சொல்லாதது அவரது வெட்கமின்மையை காட்டுகிறது.

3. நாலைந்து நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் பக்ராம் விமான தளத்திலிருந்து புறப்பட்ட போயிங் 747 வகை கார்கோ விமானமொன்று, கிளம்பிய சில நிமிடங்களிலேயே, தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது, அருகிலிருந்த ஒரு வாகனத்தின் டேஷ்போர்ட் கேமரா, 3 நிமிட வீடியோவாக அவ்விமானத்தின் மரணத்தை பதிவு செய்திருந்ததை, டிவியில் பார்த்தபோது சற்று கலக்கமாக இருந்தது. கூர்ந்த அறிவை ஆயுதமாக பயன்படுத்தி தொழில்நுட்பத்தில் எத்தனை உச்சம் தொட்டாலும், checklist தயாரித்து கவனமாக இருந்தாலும், நம்மை மீறி சிலபல விஷயங்கள் நடப்பதை நம்மால் தடுக்க முடியாது என்பது தெளிவு. அந்த வீடியோவை இங்கே காணலாம். http://edition.cnn.com/2013/05/01/world/asia/afghanistan-bagram-crash-video/?hpt=hp_mid


4. சீனா, இந்திய எல்லையிலிருந்து கிட்டத்தட்ட 18 கி.மீ உள்ளே வந்து, 5 ராணுவ கூடாரங்களை அமைத்து 18 நாட்களாக அழும்பு பண்ணிக் கொண்டிருப்பது குறித்த செய்திகளையும், விவாதங்களையும் ஆங்கில நியூஸ் சேனல்களில் பார்க்கையில், பரிதாபமாகவும் அதே சமயம் நகைச்சுவையாகவும் உள்ளது. இந்தியாவுக்கு வெளிநாட்டுக் கொள்கை என்று எதுவும் கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். முன்பொரு முறை, காஷ்மீர் வாழ் இந்தியருக்கு மட்டும் (இந்தியாவை வெறுப்பேற்றுவதற்காக) சீனா தனி வகை விசா வழங்கியபோதும், அருணாச்சலப்பிரதேசத்தை “தென் திபெத்” என்று கூறி வருவதற்கும், இந்தியா மினிமம் என்ன செய்திருக்க வேண்டும்? திபெத்தை disputed territory- யாகத்தான் இந்தியாவும் பார்க்கிறது என்றாவது (official ஆகவோ unofficial ஆகவோ) அறிவித்திருக்க வேண்டாமோ!

சீனா (தனக்குச் சாதகமான சூழல் என்று உணர்ந்து), நீரை சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது (testing the waters!). எதிர்காலத்தில் ஒரு சிறிய அளவுக்கான போருக்கான ஓர் ஆயத்தமாக இது இருக்கலாம். இந்த விஷயத்தில் பிஜேபி காங்கிரஸை விட எந்த விதத்திலும் பெட்டர் என்று கூற முடியவில்லை. அவர்கள் ஆட்சியில் இருந்திருந்தாலும், எதையும் கழட்டியிருக்க மாட்டார்கள் என்பது தான் யதார்த்தம்.

5. 20 ஆண்டுகள், பாகிஸ்தானிய இருட்டுச் சிறையில் உழன்று, அநியாயமாக, வஞ்சகமாக சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட சரப்ஜித் சிங்கை இப்போது மாவீரனாக, தேசிய நாயகனாக கொண்டாடுவதால் என்ன பயன்? அவரைப் போல பல நாடுகளில் பல இந்தியக் கைதிகள் பல வருடங்களாக உழன்று கொண்டிருக்கின்றனர். தமிழ் மீனவர்கள் சிங்களக் கப்பல் படையால் தாக்கப்படுவது ஒரு வழக்கமாகவே ஆகி விட்டது. எந்த இந்திய அரசுக்கும் தம் மக்கள் எங்கிருந்தாலும் காக்கப்பட வேண்டியவர்கள் என்ற பொறுப்பும் கிடையாது, உணர்வும் கிடையாது. இவை இருந்தால் மட்டுமே, சரியான துரித நடவடிக்கை என்பது சாத்தியம்.

6. சீக்கியர்களுக்கு எதிரான 1984 தில்லி வன்முறை சம்பந்தப்பட்ட ஒரு வழக்கிலிருந்து முக்கியக் குற்றவாளியான, மாஜி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமாரை, சாட்சியங்கள் வலுவாக இல்லாத நிலையில், கோர்ட் விடுவித்திருப்பது, சீக்கியர்களிடையே பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஜ்ஜன், ஜக்திஷ் டைட்லர், லலித் மகேன் (இவர் காலிஸ்தான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு இறந்தார்) ஆகிய மூவருக்கும் சீக்கியப் படுகொலையில் சம்பந்தமில்லை என்றால், எதால் சிரிப்பது (அ) அழுவது என்று புரியவில்லை! சீக்கியப் படுகொலை பற்றி அறிய:
https://en.wikipedia.org/wiki/1984_anti-Sikh_riots

மோடி அப்பழுக்கற்றவர் என்றெல்லாம் கூறவில்லை. குஜராத் படுகொலையை முன் வைத்து காங்கிரஸ் கட்சி மோடியை வசை பாடுவது, அபத்த முரணாகத் தோன்றுகிறது.

7. பாமக தலைவர் ராமதாஸ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து வெடித்துள்ள வன்முறை, பொது அமைதிக்கு பங்கம் மற்றும் பெருமளவில் பொதுச்சொத்து நாசம் குறித்து, இது எதிர்பார்த்த ஒன்று என்பது தவிர கூற எதுவுமில்லை.
History has the bad habit of repeating itself.

Thursday, November 29, 2012

பெருமாளுக்குத் தீட்டு

பெருமாளுக்குத் தீட்டு


கடலூரில் உள்ள வைணவ திவ்யதேசமான திருவந்திபுரத்தில் தேவநாத சுவாமி எழுந்தருளியிருக்கிறார். நேற்று பதினெட்டு வயது பெண் ஒருத்தி பக்திப் பரவசத்தில், “கோவிந்தா கோவிந்தா” என்று உரக்க சொல்லியபடி பெருமாளின் சன்னதிக்குள் சட்டென்று நுழைந்து, உத்சவ மூர்த்தியை தொட்டு வழிபாடு செய்த காரணத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோயிலின் மூத்த அர்ச்சகர், கோயில் நிர்வாகிகள் அப்பெண்ணை போலீசிடம் ஒப்படைத்து விட்டதாகவும், அப்பெண்ணின் செய்கையால், தீட்டு ஏற்பட்டு கோயிலின் பவித்திரத்திற்கு தோஷம் உண்டானதால் கோயிலை உடனடியாக மூடி விட்டதாகவும் தெரிவித்தார்!

கோயிலின் நிர்வாக அதிகாரி, அப்பெண்ணின் மீது திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், புலவனூரில் இருக்கும் கண்ணன் பட்டாச்சாரியர் என்பவரை வரவழைத்து, பவித்திரோத்சவ காரியங்களை மேற்கொண்டதாக அவர் கூறினார் (இவ்விஷயத்தில் கண்ணன் வாத்தியார் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கக்கூடும்!). ஒரு 2 மணி நேர ஜல சம்ரோக்‌ஷண பூஜைக்குப் பின்னர் 4.45 மணி அளவில் கோயில் மீண்டும் திறக்கப்பட்டது.

சன்னதிக்குள் நுழைந்த பெண்ணுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே ஏதோ பிரச்சினை இருந்ததாகவும், ஒருவித மோன நிலையில் அப்பெண் அப்படி செய்து விட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருப்பதிக்கே லட்டா என்பது போல பெருமாளுக்கே தீட்டா (அவன் அண்டசராசர அதிபதி என்பதால், அந்த 2 மணி நேரம் சகல லோகங்களும் தீட்டு தோஷத்தில் இருந்திருக்க வேண்டும் அல்லவா?) என்பது ஒரு புறமிருக்க, ஒரு சாதாரண விஷயத்தை போலீஸ் வரை எடுத்துச் சென்று ஒரு பெரிய செய்தியாக்க வேண்டுமா என்பதும் தொக்கி நிற்கிறது! ஆண்டாள் என்ற சிறுமி அணிந்த மாலையை (விஷ்ணு சித்தர் (பெரியாழ்வார்) அதை தவறான செயலாக கருதியபோதும்) மனமுவந்து ஏற்றுக் கொண்டவன் அந்த திருவரங்கப் பெருமாள்! வைணவ வாழ்த்தே, “அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ” என்று அடியார்களுக்கு முதல் மரியாதை செய்கிறது!

அதே நேரம், பக்தியில் மனமுருகி ஒரு அடியவர் தன்னைத் தொடும்போது, கருணாகர மூர்த்தியான பெருமாளுக்கு மனம் குளிர்வதோடு, தீட்டும் தோஷமும் ஏற்படும் என்பதை வைணவ அடியார்கள் புரிந்து கொள்ள வேண்டும்!!

- எ.அ.பாலா

Saturday, October 29, 2011

நினைவுக் காவிரியில் ஒரு பயணம்

நாஸ்டால்ஜியா (மலரும் நினைவுகள்) என்பது, ஒரு காரணமும் இன்றி, பரணில் என்றோ பத்திரப்படுத்திய தேய்ந்து போன கிராமஃபோன் தகடு போன்றது! அதிலிருந்து வெளிப்படும் குரல் கரகரப்பாக இருப்பினும், அந்த அடிப்படை இசை நினைவுத் தெளிவாக, மனதைக் கவ்வி ரீங்காரமிட வைக்க வல்லது.

விரைவில் விற்கப்படவிருந்த, பல காலமாக காலியாக இருந்த, பள்ளிக்காலத்தில் வாழ்ந்த பழைய வீட்டுக்குள் நுழைகையில் அன்னியோன்னியமான ஒரு அன்னியன் போல் உணர்ந்தேன். மஞ்சள் படிந்த முன்பக்க சுண்ணாம்பு சுவற்றில் நான் நட்டு நீர் ஊற்றி வளர்த்த புளிய மரத்தின் நிழல் நீண்டிருந்தது, சிறுவயது மழைக்கால இரவுகளில் பல கரங்கள் கொண்ட ஒரு கரும்பேய் போல அம்மரம் காட்சியளித்து பயமுறுத்தியது இப்போது ஒரு புன்முறுவலை வரவழைத்தது.

வழக்கமாக வீட்டுக்கு வெள்ளையடித்த மாடசாமி கூட அறியாத சில ரகசிய இடங்களில் இருந்த பழைய கவிதைக் கிறுக்கல்களின் நாயகி நினைவில் நிழலாடினாள். பழைய புத்தகங்கள் இருந்த அறையில் ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டுகையில், கறுப்பு வெள்ளை புகைப்படத்தில், இரட்டைப் பின்னலுடன், மையிட்ட கண்களுடன், கன்னங்குழித்த வெட்கப் புன்னகையுடன் அவளைப் பார்க்கையில், அப்போது காற்றில் தவழ்ந்த மல்லிகை மணமும், கலகல சிரிப்புச் சத்தமும், இப்போது நனவு போலவே!

அம்மண அறைகளில் அலைகையில் அன்று குடும்ப புகைப்படங்கள் தொங்கிய வெற்றுச் சதுரங்கள் இன்று எண்ண வட்டங்களைத் தோற்றுவித்தன. ஓடு வேய்ந்த கூரை ஓட்டைகளின் நடுவில் மரச்சட்டங்கள், வானத்துக்கு எதிரான சவாலில் வென்று ஜுராஸிக் எலும்புகள் போல காட்சியளித்தன. உடைந்த செம்மண் தரையில் ஒற்றை கிளப் ஏஸ் சீட்டு காலை நெருடியபோது வீட்டு ரேழியில் டிரம்ப்ஸ் (Trumps) சீட்டாட்டம் ஆடிய பள்ளி நண்பர்கள் (மொட்டை, குள்ளிபா, ஜொல்லு, சோடா, உசிலை, துலுக்ஸ்) குறித்த பல ஞாபகங்கள் ஒரு சுனாமி போல உணர்வில் மோதின.

குளிர்ச்சியாக இருந்த கூடத்து மரத்தூண்களை கட்டிக்கொண்டு கடைசி முறையாக வாசனை பார்த்தேன். ஆறடி உயர அப்பா உறுதியாக தூணில் கையைப் பதித்திருக்க, அவரது புஜத்தில் தொங்கி ஊஞ்சலாடிய நான்காம் வயது ஞாபகமும், “இன்னொரு காபி குடிக்கறியாடா?” (3 வயதிலேயே பாலுக்கு பதில் காபி குடிக்க ஆரம்பித்து விட்ட முதல் ஆள் நானாகத் தான் இருப்பேன்!) என்ற அம்மாவின் வாஞ்சையான குரலும்,  சுற்றம் சூழ வாழ்ந்த அந்த வீடெங்கும் காலை வேளைகளில் தவழ்ந்த, அம்மாவின் பிரத்யேக காபி மணமும் இப்போது நினைவுக்கு வந்து கண்ணில் நீர் திரையிட்டது. இந்த வீடும் இப்போது இறந்து கொண்டு தான் இருந்தது!

பின் பக்கம் இருந்த சிறிய தோட்டத்தில் செடி கொடிகள் கவனிப்பார் அற்று கண்டபடி வளர்ந்திருந்தன, குப்பைக்கூளமாக இருந்த முற்றத்தின் நடுவில் இருந்த துளசி மாடம் மட்டும் பளிச்சென சுத்தமாக இருந்தது ஆச்சரியத்தை வரவழைத்தது. ஒரு துளசி இலையை வாயிலிட்டு மெல்லுகையில், ஏனோ மனதுக்கு மிக இதமாக இருந்தது. துளசி மாடத்தின் கூண்டிலிருந்த அகல் விளக்கு எண்ணெய்ப் பசை யாரோ விளக்கேற்றியதற்கும், மாடத்தின் சமீபத்திய தூய்மைக்கும் அத்தாட்சியாக இருந்தது.

சட்டைப்பையில் ஐஃபோன் கிணுகிணுத்தது. வீட்டை விலைக்கு வாங்கவிருந்த பில்டரின் அழைப்பு. நான் பதிலளிக்கவில்லை!

அன்புடன்
பாலா

Monday, April 05, 2010

நீர் மேலாண்மை -2 -கி அ அ அனானி

நீர் மேலாண்மை குறித்து முதல் பகுதியை வாசித்து விட்டுத் தொடரவும்.

பண்டைத் தமிழர்களின் நீர் மேலாண்மை

1) நீரின்றி அமையாது உலகு 2) தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே போன்ற அந்தக்காலத் தமிழ் முது மொழிகளிலிருந்தே வாழ்வாதாரமான தண்ணீரின் தேவையையும் முக்கியத்துவத்தையும் தமிழர்கள் நன்கு உணர்ந்திருந்தனர் என்பது தெளிவு.

தொன்று தொட்டே தமிழகத்தில் குறிப்பாக பல்லவர் ஆண்ட தொண்டை நாடு என்று சொல்லக்கூடிய வட தமிழ் நாட்டில் பெரும்பாலான ஆறுகளும் ஏரிகளும் மழையை எதிர் பார்த்தவையே. வற்றாத ஜீவநதிகள் இப்பகுதியில் ஏன் பெருவாரியான தமிழர் வாழ்ந்த பகுதியிலேயே இல்லை என்றே சொல்லலாம். எனவே ஒவ்வொரு ஊரிலும் ஏரிகளும் , குளங்களும் அமைத்தே வாழ்வாதாரமான வேளாண்மை நடை பெற்று வந்துள்ளது.

காடுகளை அழித்து புதிய நாடுகள் உருவான போதும் நாட்டு மக்களின் அடிப்படைத் தேவை நீர். எனவேதான் சங்கத் தமிழ் மன்னர்கள் "காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கினர்". நாட்டில் குளம் வெட்டினால் தான் நலம் பெறுகும் என்பதை எந்தளவுக்கு அந்தக் கால ஆட்சியாளர்கள் உணர்ந்திருந்தனர் என்பதற்கு இந்தப் பட்டினப்பாடல் வரி ஒரு சான்று!

கிட்டத்தட்ட 1600 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூலில் ஒன்றான "சிறுபஞ்சமூலத்தில் " காரியாசான் சுவர்கத்துக்குப் போகும் வழி என எதைக் குறிப்பிடுகிறார் பாருங்கள்

குளங்கொட்டுக் கோடு பதித்துவழி சீத்து
உளந்தொட்(டு) உழுவயல் ஆக்கி - வளந்தொட்டுப்
பாகு படுங்கிணற்றோ(டு) என்றிவ்ஐம் பாற்படுப்பான்
ஏகும் சுவர்க்கத்(து) தினிது

(குளம் வெட்டுதல், அதனைச் சுற்றி மரக்கிளைகளை நடுதல், மக்கள் நடக்கும் வழியை செதுக்கிச் சீர்திருத்துதல்,தரிசு நிலத்தின் உள்ளிடத்தைச் செப்பம் செய்து உழுவயலாக்குதல் அவற்றுடன் வளமான நீர் வரும் படி தோண்டி சுற்றிலும் சுவர் எழுப்பிக் கிணறு உண்டாக்குதல் என்று சொல்லக் கூடிய இந்த ஐந்து பகுதிகளையும் உண்டாக்கியவன் சொர்கத்துக்கு இனிதாகப் போவான்)

அதற்கும் 200 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது கி பி 2ஆம் நூற்றாண்டிலேயே நல்லாதனார் "திரிகடுகம்" என்னும் மற்றொரு பதினெண் கீழ்க்கணக்கு நூலில் பின்வருமாறு கூருகிறார்.

மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் - உண்ணுநீர்
கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா உடம்பெய்தி னார்.

( உலகத்தில் மேலான புகழை நாட்டியவனும்,சிறந்த கற்புடைய பெண்ணை மனைவியாகப் பெற்றவனும், குடிக்க நீர் குறைவு படாத படி கிணறுகளைத் தோண்டி வைத்தவனும் ஆகிய இம்மூவரும் எக்காலத்திலும் இறவாத புகழுடம்பைப் பெற்றவர்கள்)

எத்தனையோ சாம்ராஜ்ஜியங்கள் எழுந்தும் வீழ்ந்தும் போனாலும் ,எத்தனையோ மன்னர்கள் வந்து போனாலும் 1800 ஆண்டுகளுக்கு முன் கல்லணை கட்டுவித்த கரிகால் சோழன் பெயர் இன்றளவும் நிலைத்திருப்பது நல்லாதனார் கணித்தது எவ்வளவு உண்மை என நமக்குணர்த்துகிறது.

இதே அடிப்படையில் பல்லவ மன்னர்கள் தங்கள் ஆட்சியின் தொடக்க காலத்தில் பல 'பிரமதேயம் " என்னும் குடியிருப்புகளை ஏற்படுத்தியதல்லாது அந்தக் குடியிருப்புகளுக்கு வேண்டிய நீர் ஆதாரங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தனர். ( பிரமதேயமோ அல்லது அது எதற்காய் உருவாக்கப் பட்டது என்பதோ இக்கட்டுரையின் பேசு பொருளல்ல.ஒவ்வொரு குடியிருப்பு ஏற்படுத்தும் போதும் அதற்குத் தேவையான நீராதாரங்களையும் சேர்த்தே அக்கால மன்னர்கள் எழுப்புவித்தார்கள் என்பதே குறிப்பிடுகிறேன்) எடுத்துக் காட்டாக முதலாம் பரமேசுவர மன்னனின் ஆட்சிக் காலத்தில் ( கி பி 669-700) பரமேசுவர மங்கலம் என்ற பெயரில் பிரமதேயமாக நிலம் கொடுத்தான்.அத்துடன் அவ்வூரில் பரமேசுவர தடாகம் என்று ஒரு ஏரியை ஏற்ப்படுத்திப் பாலாற்றிலிருந்து நீர் கொண்டுவர பெரும்பிடுகு என்னும் கால்வாயையும், அக்கால்வாயிலிருந்து நலைவாய், தலைப் பேழை, ஊற்றுக்கால் என்னும் கிளைகளையும் வெட்டிக் கொள்ள அனுமதியளித்தான் என்பதனை கூரம் செப்பேடுகள் வாயிலாக அறிய முடிகிறது.

இதே போல இரண்டாம் நந்தி வர்ம பல்லவன் உதய சந்திர மண்டலம், ஏகதீர மங்கலம், நயதீர மங்கலம் போன்ற பல ஊர்களை உருவாக்க தானமாக நிலம் கொடுத்து அதற்குத் தேவையான நீராதாரங்களுக்கும் வழிவகை செய்து கொடுத்துள்ளான் என்பதை பல செப்பேடுகள் மூலம் அறிகிறோம்.

தொண்டை நாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்த மிகச் சிறந்த குடியிருப்பு உத்திர மேரூர். சுமார் 5 சதுர கீ மி பரப்பளவில் இந்தப் பரந்த ஊர் அமைந்திருந்தது.10 சேரிகளும் 15 பிடாகை ஊர்களும் இதனுள் அடக்கம். (இந்த ஊரில்தான் குடஓலை முறையில் நிர்வாகக் குழுக்கள் வாரியங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்தியாவுக்கே தேர்தல் அறிமுகம் செய்யப்பட்ட நற்பணி நடந்தது) இந்த ஊரின் ஜீவ நாடியாக அமைந்தது "வைரமேகத் தடாகம்" என்னும் பேரேரியாகும். கி பி 739லேயே மகாசபை என்ற ஓர் அமைப்பு செயல் பட்டதும் இச்சபையின் கீழ் பல வாரியங்கள் பகுக்கப் பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. கி பி 878ல் ஏரி வாரியம் என்றோரு வாரியம் செயல்பட்டிருப்பதே நீர்ப்பாசனத்துக்கும் நீர் மேலாண்மைக்கும் அளிக்கப் பட்டு வந்துள்ள முக்கியத்துவத்துக்கு சான்றாகும்.

அமைத்ததோடு மட்டுமின்றி வயிரமேகத் தடாகத்தை ஆண்டு தோரும் குழிகுத்திப் பராமரிப்பது ( தூர் வாருவது) முறையாகச் செய்யப்பட்டு வந்துள்ளது. இதற்கென வணிகர்களும் செல்வந்தர்களும் நன்கொடையும் அளித்துள்ளனர்.கி பி 739லேயே குழி குத்தப்பட்ட செய்தியை ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. சேட்டத்தரயன் தான வேந்தன் என்பவன் 20 கழஞ்சு பொன்னும் எரு விலையால் வந்த திரவியத்தை உத்திர மேரூர் சபையினரிடம் கொடுத்து குழி குத்த ஏற்பாடு செய்தான், தந்தி வர்மன் (கி பி 803-ல்) 5 பட்டி நிலத்தைக் கொடையாகப் பெற்ற பெருங்குறி சபையார் அதனைக் கொண்டு ஏரியைத் தோண்டி கரையை உயர்த்தினர். கி பி 883 ல் கழுக்குன்றன் எனும் வணிகன் 100 கழஞ்சு பொன்னும் 28 காடி நெல்லும் கொடையளித்தான் . கி பி 886ல் மன்னிப்பாக்கிழான் என்ற வணிகன் 100 கழஞ்சு பொன்னும் கி பி 886 ல் அவனே மற்றும் 100 கழஞ்சு பொன்னும் கொடுத்தான் என்று பலப் பல செய்திகள் மூலம் எப்படி அந்தக் காலத்தில் தமிழர் நீராதாரங்களான ஏரி,குளம் , கிணறு முதலானவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவைகளை வெட்டுவித்தும் பராமரித்தும் வந்துள்ளனர் என அறியமுடிகிறது.

பொதுவாகவே ஆண்டு தோரும் தூர் வாரப் பட்டுள்ளதை மாமல்லபுரம் பையனூர்க் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

முன்னரே சொன்னது போல் தொண்டை நாடு என்று சொல்லக்கூடிய வட தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஏரிகளும் , குளங்களும் அமைத்தே வாழ்வாதாரமான வேளாண்மை நடை பெற்று வந்துள்ளது. கி பி 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டிலேயேமக்கள் ஏரிகளை உருவாக்கியுள்ளனர்.

கி பி 550ல் சமணத் துறவி வஜ்ர நந்திக்கு பருத்திக் குன்றம் என்ற ஊரை பள்ளிச் சாந்தமாக கொடுத்த போதே ஏந்தல் ஏரி,வேள்வடுகன் ஏரி மற்றும் நீலபாடிவதி, மூலை ஏற்றம், முருக்கங்கேணி போன்ற நீராதாரங்கள் அந்த ஊரில் இருந்திருப்பதை அறிய முடிகிறது.
கோவில் கட்டும் போதும் ஏரி தோண்டுவதும் முக்கியமான பணியாக நற்பலனைத் தரும் பணியாக மக்கள் கருதினர். காட்டுத் தும்பூரில் 563 ஆம் ஆண்டு கனக வல்லி ஏரி உருவாக்கப்பட்டது. உத்திரமேரூருக்கருகில் மல்லியங்கரணை ஏரி, வெள்ளேரி, தும்பனேரி கார்வதி ஏரி என பல ஏரிகள் ஏற்பட்டுள்ளன.இப்படிப் பலப்பல உதாரணங்கள்.

பின்வந்த சோழர்கள் 11ஆம் நூற்றாண்டில் எடுப்புவித்த சோழகங்க ஏரி( இன்றைய பொன்னேரி) வீர நாராணம் ஏரி ( இன்றைய வீராணம் ஏரி) இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஏரிகளிலிருந்து நீரை வெளியே எடுப்பதற்குப் பல வழிகளைப் பின்பற்றியுள்ளனர் நம் முன்னோர். கலிங்கு, மதகு , தூம்பு என சில கட்டுமானங்களின் மூலம் நீரை முறையாகப் பயன் படுத்தியுள்ளனர். இன்றைய நீர் நிர்வாகம் அல்லது நீர் மேலாண்மை என்று சொல்லக்கூடிய அறிவுத்துதை (water Management) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் மக்களிடம் இருந்துள்ளது.

நாட்டுக்கால், ஆற்றுக்கால், ஊற்றுக்கால் எனும் பெயர்களில் அக்காலத்தில் கால்வாய்கள் அமைக்கப் பட்டுள்ளன.இவற்றைப் பராமரிக்கவும் பெரிதும் அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் தனிச்சையாகக் கால் வெட்டுவோர் தண்டிக்கப் பட்டுள்ளனர். நீர் நிலைகளை ஏற்படுத்துவதை தம் வாழ்வின் பெரும் தர்மமாக நினைத்துள்ளனர் மக்கள் . திருவெள்ளரை ஸ்வஸ்திகக் கிணறு ( இன்று நல்ல தமிழில் "நாலு மூலைக் கேணி" என்று அழைக்கப் படுகிறது) அருகில் உள்ள கல்வெட்டு

கண்டார்காணா உலகத்தே காதல் செய்து நில்லாதே
பண்டே பரமன் படைத்த நாள் பார்த்து நின்று நய்யதேய்
தண்டார் மூப்பு வந்துன்னைத் தளரச் செய்து நில்லாமுன்
உண்டேல் உண்டு மிக்கது உலகம் அறிய வைமினே

என்கிறது .அதாவது தம் ஆயுளுக்குப் பிறகும் தம் பெயர் சொல்வது நீருதவும் தர்மம் என்பதே இதன் அடிப்படைக் கருத்து.

நீர்நிலைகளை அழித்தல் பெரும் நாசம் என்பதனையும் நம் மக்கள் உணர்ந்து அப்படிச் செய்யப் புகுந்தவர்களை எச்சரித்துள்ளனர்

"கீழ்வேளூர் சபையார் தன்மம். இதற்கு அஹிதம்
செய்தவன் காவிரி குலை குத்தின பாவங்கொள்வான் "

என்று தாராசுரத்தில் கிடைத்த கல்வெட்டு "காவிரிக் கரையைச் சிதைத்த பாவம்" என்று பாவச் செயல்களுக்கே ஒரு reference point ஆக நீர் நிலைகளை அழிப்பதைக் கொள்கிறது

கட்டுரையின் பெறுவாரியான பகுதிகள் நான் வாசித்த முனைவர் சொ.சாந்தலிங்கத்தின் " தமிழர் பண்பாட்டுப் பதிவுகள் " என்ற நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது

ஆனால் இன்றைய தமிழகத்திலே நடப்பதென்ன ?

கட்டுரை மிக நீண்டு விட்டதால் அடுத்த பகுதியில் பார்ப்போம் :)

கி அ அ அனானி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Sunday, April 04, 2010

559. நீர் மேலாண்மை -1 - கி அ அ அனானி

ஒரு பிரேக்குக்கு அப்றம் கி.அ.அ.அனானியிடமிருந்து மெயிலில் மேட்டர் வந்தது! ஆஹா, இப்ப நடக்கிற பார்ப்பனீயம் / சங்கம் "டமால்-டுமீல்" பத்தி தன் கருத்துகளை தான் அனுப்பியிருப்பார்னு நினைச்சு, ஆவலா மெயிலைத் திறந்தா, கி.அ.அ.அ-வும் வேஸ்ட் பார்ட்டி ஆயிட்டார்னு புரிந்தது ;-) ஏதோ (அவருக்கு துளியும் ஒவ்வாத!) அறிவுஜீவி லெவலில், நீர் மேலாண்மை (அது என்ன எழவோ :-)) பத்தி நீ.......................ளமா மேட்டர் அனுப்பியிருக்கார்!

3 இடுகைகளாத் தான் போட முடியும்னு நினைக்கிறேன். கி.அ.அ.அ-யிடமிருந்து இந்த மாதிரி சப்பை இடுகை வருவது, பரந்து விரிந்திருக்கும் அவர் வாசகர் வட்டத்துக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம் ;-) இருந்தாலும், Considering கி.அ.அ.அ's glorious past in terms of material he has sent earlier to me for publishing in my blog, I am unable to say "No" to publish this matter, இந்த மாதிரி "அறிவுஜீவி" வேஷம் அவர் போட முனைவது சரியில்லை என்றாலும் :-) விரைவிலேயே அவர் தன்னிலை உணர்ந்து, அதற்கேற்றவாறு, "அவல்" வகை மேட்டரை எழுதி அனுப்புவார் என்று (உங்களைப் போலவே) நான் எதிர்பார்க்கிறேன்!

Over to கி அ அ அனானி.
**********************************************

நீர் மேலாண்மை - Part 1 - By கி அ அ அனானி

சில நாட்களுக்கு முன் ஹிந்து ஆங்கில நாளிதழில் பான்ஜிபாய் மதூக்கியா என்கின்ற குஜராத் விவசாயி பற்றிய கட்டுரை வாசிக்க நேர்ந்தது.அப்படி என்ன செய்து விட்டார் குஜராத்தின் மிகவும் வரண்ட மாவட்டமான ஜுனாகாத்தின் காலாவாட் என்கின்ற கிராமத்தைச் சேர்ந்த இந்த விவசாயி. அதிகமில்லை நண்பர்களே.வரண்ட ஜுனாகாத் கிணறுகளில் நீர் தளும்பச் செய்திருக்கிறார். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் உண்மை.

ஒரு சில வருடங்களுக்கு முன்னால் ஜுனாகாத் மாவட்டத்தில் பல விவசாயிகள் கடும் வரட்சி காரணமாக வாழ்வாதாரமான விவசாயத்தையே கை விடும் படியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் இன்றோ பெருவாரியான கிணறுகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது.மேலும் தண்ணீர் தட்டுப்பாடு பயமின்றி விவசாயிகள் தங்களது பயிர்களை வளர்க்க முடிகிறது.பான்ஜி பாய் என்கின்ற ஒரு விவசாயி கட்டிய சிறு சிறு தடுப்பணைகள் மூலம் இந்த நிலை சாத்தியமாகி இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

இது பான்ஜிபாய் மதூக்கியா, கி.அ.அ.அ இல்லை!

இந்த விவசாயி முதலில் தனது கிராமத்தில் ஓடும் சிறு ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை ஏற்படுத்தியுள்ளார்.இந்தத் தடுப்பணை தண்ணீரின் எடையைத் தாங்குமாறு கீழே பல அரை வட்ட வடிவ வளைவுகளைக் கொண்டுள்ளது (எப்படி ரயில்வே பாலங்களில் ஓடும் ரயிலின் எடையைத் தாங்கும் படி வடிவமைக்கப் பட்டிருக்குமோ அது மாதிரி.) இந்த தடுப்பணை கட்ட சாதாரணமாக கட்டப்படும் தடுப்பணையை விட குறைந்த செலவு

ஆவது மட்டுமல்லாமல் சாதாரண அணைகளை விட திடமானதாகவும் கட்ட எளிதானதும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதன் பிரத்தியேக வடிவமைப்பினால் அதிக தண்ணீர் அழுத்தத்தையும் நீரின் ஓட்டத்தையும் தடுக்கும் படியும் இருக்கிறதாம்.

இந்தத் தடுப்பணை கட்ட பான்ஜிபாய் கிராமத்தில் சும்மா கிடக்கும் கற்களை பயன்படுத்தியிருக்கிறார்,சீரான இடைவெளியுடன் கற்களை வைத்து இடை வெளியை நிரப்ப ஆற்று மணலையும், சிறு கற்களையும் சிமென்ட்டையுமே பயன் படுத்தியிருக்கிறார்.ஒரு தடுப்பணை கட்ட கூலியும் சேர்த்து மொத்த செலவே 10000 ரூபாய்க்குள்தான் என்பது வியப்பிலாழ்த்துகிறது. இந்த முதல் தடுப்பணை கட்டப்பட்ட பின் அதன் பலனைப் பாத்த கிராமத்து விவசாயிகள் ஆற்றின் கீழ்ப்பகுதியில் மேலும் பல தடுப்பணைகளை கட்டச் சொல்லி இவரைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அதனால் மேலும் அவர் இரண்டு தடுப்பணைகளை இதே ஆற்றின் குறுக்கே கட்டியுள்ளார்.இது வரை பான்ஜிபாய் குஜராத்திலும் ராஜஸ்தானத்திலுமாக 25க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டியிருக்கிறார் என்பது நம்மை வாய் பிளக்க வைக்கிறது.

இந்த தடுப்பணைகளைப் பற்றி சொல்லும் போது பான்ஜிபாய் "ஒரு சிறு தடுப்பணை கட்டுவதென்றால் கிட்டத்தட்ட 50000 முதல் 100000 வரை செலவாகும். ஆனால் நான் 10000 மட்டுமே செலவழித்தேன். இங்கு ஓடும் பெருவாரியான ஆறுகள் வற்றாத ஆறுகள் இல்லை என்பதால் இந்த தடுப்பணைகள் ஆற்று உபரி நீர் ஓடி விரயமாவதைத் தடுக்கிறது. மழைக்காலம் முடிந்த உடன் தண்ணீர் தட்டுப்பாடு விவசாயத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. ஆறுகளுக்கு அடுத்த படியான முக்கிய நீராதாரங்கள் கிணறுகள் தான்.

மழைக்காலம் முடிந்தால் கிணற்று நீர் மட்டமும் குறைந்து விடுகிறது. இந்தத் தடுப்பணை உபரியாக ஓடும் நீரைத் தடுப்பதுடனல்லாது கிணற்று நீர் அளவையும் உயர்த்தி விடுகிறது" என்கிறார்.

பான்ஜிபாயின் இத்தகைய தடுப்பணைகளை கட்ட அதிகம் செலவாகாது என்பதால் அரசாங்கத்தின் உதவியை எதிர் பார்க்காமல் தனி நபர்களோஅல்லது சிறு குழுக்களோ கூட எளிதாக செயல் படுத்தி விடலாம்.இந்த முறை இந்தியாவெங்கும் பயன் படுத்தப் பட்டால் கிராம சிறு விவசாயம் பெரும் நன்மையடையும் என்பதோடு மட்டுமல்லாது இந்திய மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கே உதவியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.பான்ஜிபாய் போன்ற அனுபவ இயற்கை விஞ்ஞானிகள் நமது கிராமப் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பு போன்றவர்கள் என்றால் அது மிகையில்லை.

வற்றாத நதிகள் இல்லாத நமது தமிழகத்திலும் இது போன்ற சிறு சிறு முயற்ச்சிகளை செயல்படுத்தினாலே விவசாயத்தில் முன்னேற்றம் காணலாம் என்பதில் சந்தேகமில்லை. தமிழகத்தில் அந்தக் காலத்தில் செயல் படுத்தப் பட்ட நீர் மேலாண்மை மற்றும் எனது கருத்துக்கள் பற்றி அடுத்த பதிவில் :)

கி அ அ அனானி

செய்தி மற்றும் படம்: நன்றி. ஹிந்து நாளிதழ்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Saturday, October 31, 2009

551.சென்னையில் தொலைந்து போனவர்கள்!

அன்று காலையில் "டியாப்பம் டியாப்பம்" என்று கூவிக்கொண்டு சைக்கிளில் சென்றவரைப் பார்க்கையில், சில மலரும் நினைவுகள் தோன்றின. நமது இந்த அவசர, "வளர்ச்சி" அடைந்த வாழ்க்கையின் காரணமாக, எத்தனை மனிதர்கள் தொலைந்து போய் விட்டார்கள், இந்த மாநகரத்திலிருந்து! கிராமங்களில் அவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்!

என் பள்ளி நாட்களில், திருவல்லிக்கேணியின் தெருக்களில் பலவகையான மனிதர்கள் உலா வந்தார்கள்! "உப்புத் தாத்தா"வை மறக்கவே முடியாது. ஒரு பெரிய சாக்குப்பை நிறைய கல் உப்பை கைவண்டியில் இட்டு, வாரம் ஒரு முறை எங்கள் தெருவில் "உப்பேய், உப்பேய்" என்று கூவிக்கூவி விற்பார். எல்லாரும் வாங்குவார்கள். ஒரு படி நாலணா என்று ஞாபகம். அப்போதெல்லாம் யாரும் "ஐயோடைஸ்ட் சால்ட்" உபயோகித்தது இல்லை!!

அது போலவே, திருவள்ளுர்/செங்கல்பட்டு அருகே இருந்த கிராமங்களிலிருந்து பருப்பு, புளி, குண்டு மிளகாய் போன்ற சாமான்களை எடுத்து வந்து சென்னையில் ரெகுலராக விற்று வந்தனர். பளபளவென்ற மூங்கில் கூடைகளில் கலப்படமில்லா சரக்கை, நியாயமான விலைக்கு விற்றனர். அரிசிக்காரர்கள் பெரும்பாலும் தெலுங்கர்களே.

ஆந்திரத்தில்(முக்கியமாய் நெல்லூர்) விளைந்த அரிசியை வீட்டுக்கே எடுத்து வந்து அளந்து போடுவர். படிக்கணக்கு தான், கிலோவெல்லாம் கிடையாது. படி 5-6 ரூபாய் தான்.

அரிசிக்காரருடன் ஒரு கூலியாள் மூட்டை அரிசியை முதுகில் தூக்கி வந்து, அத்தனை அரிசியையும் ரேழியில் கொட்டிவிட்டு, அளந்து போடும் அந்தக் காட்சி அலாதியான சுவாரசியம்! அரிசிக்காரர் படி எண்ணிக்கையை சத்தமாக தெலுங்கில் அறிவிக்க, கூலியாள் அரிசியை படியில் இட்டு எங்கள் அரிசி டின்னில் கொட்டுவார். அவர் நிலைமை தான் பரிதாபம், என் பாட்டி (அரிசியை படியில்) 'கூம்பாகப் போடு' என்பார், அரிசிக்காரரோ தெலுங்கில் "தட்டிப்போடு" என்று கட்டளையிடுவார் :)

காஞ்சிபுர வியாபாரி ஒருவர் பளபளக்கும் வெண்ணையை தகர டின்னிலும், நெய்யை ஹார்லிக்ஸ் பாட்டில்களிலும் வீட்டுக்கே எடுத்து வந்து விற்பனை செய்வார். பணத்தையும் தவணை முறையில் வாங்கிக் கொள்வார். போனஸாக சின்னப் பசங்க எங்களுக்கு கொஞ்சம் வெண்ணெய் கொடுத்து விட்டுத் தான் புறப்படுவார்! அதை சர்க்கரையைத் தொட்டுத் தின்போம்.

அழகான மண்பானையில் தயிர் எடுத்து வந்து விற்ற ஆயாவையும் மறக்க முடியாது. அது போல ருசியான, சற்று புளிப்பான தயிர் இன்று வரை கிடைக்கவில்லை!

"கோல மாவேய் கோல மாவேய்" என்று கோலம் போடும் மாவை வீதியில் விற்ற காலமும் மலையேறி விட்டது, இங்கொன்று அங்கொன்று என்று சிலர் விற்றாலும் கூட! அதற்கு மொக்குமாவு என்ற பெயரும் உண்டு.

இப்போது, அவரவர் தங்கள் ஃபிளாட் வாசலில் ஸ்டிக்கர் கோலத்தை நிரந்தரமாக ஒட்டி விட்டு, அதை தினமும் துடைத்து விடுகிறார்கள் :) சிலர், மொத்தையாக உள்ள ஒரு சாக்குக்கட்டியால் தாரேபூரே என்று ஒரு கோலம் போடுகிறார்கள்! என்ன கொடுமை பாருங்கள்! இதனால் தான், கோலம் போடும் போட்டியெல்லாம் வைத்து, அந்த பாரம்பரியக் கலையை இப்போது காப்பாற்ற வேண்டியுள்ளது :)

பால்காரர் வீட்டுக்கு வந்து பால் தருவதும் அரிதாகி விட்டது. எருமைப்பால், பசும்பால் எல்லாம் போய், ஆவின் பால், ஆரோக்கியா பால் வந்து பலகாலமாகி விட்டது! மிச்சம் மீதியுள்ள பால்காரர்கள் பாலை ஹோட்டலுக்கு விற்று வருகின்றனர்! தெருவில் அலையும் மாடுகள் ஆவின் பிளாஸ்டிக் கவர்களை சாப்பிடுகின்றன :)

ஊதுவத்தி, கற்பூரம் மற்றும் சின்னச்சின்ன அழகுச்சாதனங்களை விற்க வரும் பெண்களை, காவல்காரர் அடுக்குமாடி குடியிருப்புக்குள் போகவே விட மாட்டார்.

சூப்பர் மார்க்கெட் கலாச்சாரமும், அவசர, துட்டுக்கு அலையும் அவல வாழ்க்கையும் அவர்களையெல்லாம் துரத்தி விட்டது. மனிதரை மனிதர் நம்ப முடியாத ஒரு சூழலால், யாரையும் வீட்டுக்கு உள்ளே அனுமதிக்க பயமாயிருப்பதுவும் ஒரு காரணம் தான்.

நமது "use & throw" என்ற அமெரிக்கரிடமிருந்து கற்றுக் கொண்ட பழக்கத்தால், காணாமல் போனவர் சிலருண்டு.பழைய பாட்டில்களையும், இரும்புச் சமாச்சாரங்களையும், பாலிதின் பால் கவர்களையும் விலைக்குப் போட்டுக் கொண்டிருந்த காலம் போய், அவையெல்லாம் இப்போது நேராக குப்பைத்தொட்டிக்கு போய் விடுகின்றனர். இது சுற்றுப்புற சுகாதார சீரழிவுக்கு வழிவகுக்கிறது. முன்பெல்லாம், பழைய துணிகளை சேர்த்து வைத்து பாத்திரக்காரரிடம் போட்டு பாத்திரம்/பிளாஸ்டிக் சாமாங்கள் வாங்குவார்கள்.

பழைய துணிகள் + பணம் என்று cash & kind முறையில் நடந்த வியாபாரம் அது. பாத்திரக்காரர், பல குடித்தனங்கள் உள்ள ஒரு வீட்டில் 2-3 மணி நேரம் உட்கார்ந்து டீலை முடிப்பார்! அடுக்குமாடி குடியிருப்பு நிறைந்த கான்கிரீட் காடாகி விட்ட ஊரில் அவர் கண்ணில் தட்டுப்படுவதே அபூர்வமாகி விட்டது.

அது போலவே, "பிளாஸ்டிக் பக்கிட்டு ரிப்பேய்ர்" என்று கூவியபடி வந்து, ஊதி ஊதி கரியைப் பற்றவைத்து, வாய்/காது அறுந்த பிளாஸ்டிக் பக்கெட்டுகளை அழகாக ஒட்டித் தருபவர்களும் காணாமல் போய் விட்டார்கள்.

கத்தி, கத்திரி, அருவாள்மனை, கூர் தேய்ந்து விட்டால், கூலாக நாம் அவற்றைத் தூக்கிப்போட்டு விட்டு, புதிது வாங்கி விடுகிறோம். அதனால், காலால் மிதித்து சக்கரம் சுழற்றி சாணக்கல்லில் அவற்றைக் கூர் தீட்டித்தரும் சாணக்காரர்களும் வழக்கொழிந்து வருகிறார்கள்.

அந்தக்காலத்தில், அவர்கள் "சாணா பிடிக்கறதே சாணா" என்று கூவிக் கொண்டு வந்தவுடன் வீதிக்கு ஓடிச் செல்வோம். தீப்பொறி பறக்க சாணம் தீட்டுவதை சிறுவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பது வாடிக்கை. ஒரு கால் பெடலை மிதிக்க, இரண்டு கைகளாலும் கத்தியை வாகாக பிடித்து, வேகமாக சுழலும் சாணக்கல்லில் அதை லாவகமாக கூர் தீட்ட வேண்டும்!

இவர்களில் தப்பியவர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளிகளும், ரோட்டில் குப்பை பொறுக்குபவர்களும் தான்! ஏனோ செருப்பைத் தைத்து உபயோகிக்கும் வழக்கம் இன்னும் நம்மிடம் இருப்பதால், முன்னவர் சிலர் தெரு ஓரங்களில் இன்னும் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.

பின்னவர் நம்மை நம்பி இல்லை; சாலையில் இருக்கும் குப்பைத் தொட்டிகளையும், அவர் துரத்திச் செல்லும் குப்பை வண்டிகளையும் நம்பி இருப்பதால், அவர்களின் வண்டியும் நகரத்தில் ஒடிக் கொண்டிருக்கிறது!

சரி, இப்படித் தொலைந்து போனவர் வாழ்வில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டு விட்டதா, அவர்கள் பிள்ளைகள் வேறு நல்ல வேலைக்குச் சென்று முன்னுக்கு வந்து விட்டார்களா என்றால், அதுவும் நல்ல அளவில் நடந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை! Inequality is so rampant. இந்த இடுகையின் முடிவில் சுட்டப்பட்டிருக்கும் "உருப்படாதது" நாராயணனின் கட்டுரையை நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும்!

நாம் காணும் பொருளாதார வளர்ச்சி என்பது அடித்தட்டு மக்களை சென்றடையவே இல்லை என்பது நிதர்சனம். ஏழைகளை ஏழைகளாக வைத்து அரசியல் நடத்தி, இந்திய ஜனநாயகம் தழைத்து வளர்ந்திருக்கிறது, கூடவே நக்ஸலிசமும் தான் !!!!

எ.அ.பாலா

picture courtesy:
1. Velachery Balu
2. DFID - UK Department for International Development
http://www.flickr.com/photos/balu/3303479445/
http://www.flickr.com/photos/dfid/3316075589/

Saturday, January 10, 2009

505. தப்புக் கணக்கில் சிக்கிய ராமலிங்க ராஜூ

நேசமுடன் வெங்கடேஷ் எழுதி ஜுனியர் விகடனில் வெளிவந்துள்ள 'சத்யம் வீழ்ச்சி' பற்றிய கட்டுரை:

ஜனவரி 7, 2009. இந்தியத் தொழில் நிறுவனங்களின் நேர்மையின் மேல் சத்யம்,கரியைப் பூசிய கறுப்பு தினம்!

உலகமே வியந்து, அண்ணாந்து பார்த்த இந்திய மென்பொருள் நிறுவனங்களில்முக்கியமான 'சத்யம்', பெரும் கறையை ஏற்படுத்தித் தடுமாற வைத்ததுஅன்றுதான். கிட்டத்தட்ட ஏழாயிரம் கோடி ரூபாயை மொத்தமாக சுவாகா செய்துவிட்டார் அதன் நிறுவனரும் சேர்மனுமான பி.ராமலிங்க ராஜு. ஒரு கட்டத்துக்கு மேல் உண்மையை மறைக்க முடியால், தனது தவறை ஒப்புக்கொண்டு தனது பதவியை ராஜினாமாவும் செய்து விட்டார்.

புதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பு, செபியின் தலைவருக்கு ராமலிங்க ராஜுவின் கடிதம் வந்துவிட்டது. அது தம்முடைய நிர்வாகக் குழுவுக்கு அவர் எழுதிய கடிதம். கூடவே, செபி தலைவருக்கும் பங்குச் சந்தைகளுக்கும் அதை அனுப்பியிருந்தார் ராஜு. வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே அக்கடிதம் முதலீட்டாளர்களிடமும் வந்து சேர்ந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே சத்யம் நிறுவனத்தில் நடந்துவந்த கணக்கு முறைகேடுகளையும் அதனால் ஏற்பட்டுள்ள இழப்புகளையும் அதில் அவர் பட்டவர்த்தனமாக ஒப்புக்கொண்டு இருந்தார்.

டிசம்பர் 31, 2008 இதழிலேயே 'உலக வங்கிக்கு லஞ்சம் கொடுத்ததா சத்யம்?' என்று நாம் இந்த முறைகேட்டின் ஆரம்பத்தைத் தொட்டுக் காட்டியிருந்தோம். ராமலிங்க ராஜு திடீரென்று, சத்யத்தை விரிவுபடுத்துவதற்காக 'மேடாஸ்' ('சத்யம்' என்பதன் ஆங்கில எழுத்துக்களை அப்படியே திருப்பிப்போட்டால் வருவது) இன்ஃப்ரா மற்றும் மேடாஸ் பிராப்பர்டீஸ் நிறுவனங்களை ரூ.7680 கோடி கொடுத்து வாங்கப் போகிறேன் என்று அறிவித்ததையும் அதனால் முதலீட்டாளர்கள் வெகுண்டெழுந்ததும் அது வாபஸ் வாங்கப்பட்டதையும் அந்தக்கட்டுரையில் சொல்லியிருந்தோம்.

மேலும், சத்யத்தின் கையிருப்பில் ரூ. 5000 கோடிக்கும் மேல் பணம் இருக்கிறது, அதைச் சுருட்டிக்கொள்ளவே, இந்த விரிவாக்க நாடகத்தை ராஜு நடத்துகிறார் என்று அப்போது பேசப்பட்டது. ஆனால், இப்போதுதான் உண்மையின்பரிமாணம் அதை விட பயங்கரமானது என்று ராஜுவின் வாயாலேயே வெளியாகி இருக்கிறது.

பல ஆண்டுகளாக, சத்யம் வளராமலே நின்று போயிருக்க... தனது புகழ் மற்றும் நிறுவனத்தின் புகழ் சரிந்துவிடாமல் இருக்கவும், வேறு யாரும் நிறுவனத்தை வாங்கிவிடாமல் தடுக்கவும், மக்களிடமும் செபி அமைப்பிடமும் அவர் பல மடங்காகக் கூட்டி லாபக் கணக்கை ஊதி பொய்யான புள்ளிவிவரம் கொடுத்து வந்திருப்பதை இப்போது ஒப்புக்கொண்டு இருக்கிறார். காட்டி வந்த பொய்க் கணக்கை ஒரு கட்டத்தில் நேர் செய்வதற்காகவே, உளுத்துப் போன மேடாஸ் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதுபோல் வாங்கி பலத்த நஷ்டக் கணக்கை பிறகு காட்டி சமாளிக்கவும் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், அந்த மேடாஸ் நாடகம் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகி அந்த முடிவை வாபஸ் வாங்க நேர்ந்ததால்...
கெட்டிக்காரன் புளுகாக அது பட்டென்று இப்போது வெளியில் வந்துவிட்டது!

சத்யத்தின் கையிருப்பில் ரூ. 5040 கோடிக்கும் மேல் இருப்பதாக மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். உண்மையில் அப்படி ஒரு தொகை அங்கே இல்லவே இல்லை. இதைப் போலவே, வட்டி மூலம்பெறப் பட்ட தொகை, பிற முதலீட்டு நிறுவனங் களில் இருந்து வாங்கிய கடன் தொகை என்று எல்லாமே தப்புக் கணக்கு, பொய்க் கணக்கு!

இப்போது தன் கடிதத்திலேயே, 'புலி மேல் ஏறியவன் கதையாக, அதன் வாயில் சிக்கிக்கொள்ளாமல் எப்படித் தப்புவது என்று தெரியாமல் என்று ராமலிங்க ராஜு கவித்துவமாக தன் சறுக்கலை வர்ணித்துள்ளார்!

விஷயம் இத்தோடு முடிந்ததா? நிச்சயமாக இல்லை! இது சத்யம் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. இதில் ஈடுபட்டுள்ள வேறு தனி நபர்களும் நிறுவனங்களும் செய்தகுளறுபடிகள் இப்போது வெளியே வரத் தொடங்கியிருக்கின்றன.

1. முதலில், இந்தப் பொய்க் கணக்கைத் தணிக்கை செய்த ஆடிட்டர்கள் யார்? அதைச் செய்த நிறுவனமான 'பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்,' எப்படி இப்படிப்பட்ட பொய்க் கணக்கை அனுமதித்தார்கள்?

2. சுயேச்சை டைரக்டர்கள் என்று ஒவ்வொரு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலும் நான்கைந்து பேர் உட்கார்ந்திருக்கிறார்களே... அவர்கள் என்ன, முந்திரி பக்கோடாவும் காபியும் மட்டும் சாப்பிட உட்கார்ந்திருக்கிறார்களா... அல்லது நிறுவனக் கணக்குகளை ஆராய உட்கார்ந்திருக்கிறார்களா?

3. ராஜு மட்டுமே முடிவெடுத்து இதைச் செய்திருக்க முடியாது. சத்யம் நிறுவனத்தின் முதன்மை நிதி நிர்வாகி, முதன்மை செயல் அதிகாரி முதற்கொண்டு மேல்மட்ட நிர்வாகிகள் பலரும் இதில் கட்டாயம் சம்பந்தப்பட்டிருக்கவேண்டும். அவர்கள் எல்லாம் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டாமா?

4. தொழில் நிறுவனங்களுக்கான நேர்மையான நிர்வாகம், கார்ப்பரேட் கவர்னன்ஸ் என்று ஒன்று உண்டே... அதை எப்படிக் காற்றில் பறக்கவிட்டார்கள்?

இந்த முறைகேடு வெளியே வந்தவுடன், முதலீட்டாளர்கள் கொதித்துப் போய்விட்டார்கள். ரூ.185 வரை விற்றுக்கொண்டிருந்த சத்யம் ஒரே நாளில் சடசடவென வீழ்ந்து, மாலையில் ரூ. 41-க்கு வந்து சேர்ந்தது. பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம். முதலீட்டாளர்கள் தலையெடுக்க முடியாத மரண அடி இது. இதேபோல், சத்யத்தின் பங்குகள் அமெரிக்காவின் பங்குச் சந்தையான நாஸ்டாக்கிலும் விற்பனை ஆகின்றன. இந்த விஷயம் தெரிந்தவுடன், அங்கே,சத்யத்தின் பங்கு வர்த்தம் நிறுத்திவைக்கப்பட்டது.

'சத்யம் மட்டுமா இந்தத் தப்பைச் செய்திருக்கும்? இன்னும் எந்தெந்த நிறுவனங்கள் எல்லாம் இதைச் செய்திருக்கக்கூடும்?' என்ற ஹேஷ்யங்கள் பங்குச் சந்தையை உலுக்கத் தொடங்கிவிட்டன. விளைவு, சந்தேகத்துக் கிடமான வேறு சில கட்டுமான நிறுவனங்களின் பங்குகளும் சரிய... புதன் மாலைக்குள் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு குறைந்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கையிழப்பைக் காட்டியது.

இன்னொரு பக்கம், ஏற்கெனவே உலகப் பொருளா தாரத்தில் ஏற்பட்டிருக்கும் சரிவு இந்தியப் பங்குச் சந்தையிலும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. இந்தியர்களின் கூர்மையான மூளை மற்றும் கடுமையான உழைப்பால் இதுவரை நாம் கண்டுவந்த வளர்ச்சியின் மீது பொறாமைகொண்ட பல அந்நியர்கள், 'தார்மீக பொறுப்புள்ள நிர்வாகம் என்பதற்காகவே விருதெல்லாம் வாங்கிய சத்யம் நிறுவனமே இப்படியென்றால், மற்ற ஐ.டி. நிறுவனங்களைப் பற்றி என்ன முடிவெடுப்பது?' என்று இப்போது தருணம் பார்த்து 'குழி பறிக்கிற' வேலையில் இறங்கியிருப்பதுதான் பெரிய சோகமே!

இதனால் இந்திய மென்பொருள் தயாரிப்பு மற்றும் பிற சேவை நிறுவனங்களின் எதிர்காலம் பாதிக்கப்படுமா..? வெளிநாட்டில் இருந்து வரும் ஆர்டர்கள் குறைந்துபோகுமா..? சிறிய மற்றும் மத்திம மென்பொருள் நிறுவனங்கள்அடிவாங்குமா என்றெல்லாம் விவாதங்கள் நடந்தபடி உள்ளன!

சரி, 7,000 கோடி ரூபாய் பொய்க் கணக்குக் காட்டிய ராஜுவுக்கு என்ன தண்டனை? ஒரு பக்கம் செபி, மற்றொரு பக்கம் ரெஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனி, இன்னொரு பக்கம் ஆந்திர மாநில போலீஸ் என்று ஒவ்வொருவரும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மிகவும் சிக்கலான பொருளாதாரக் குற்றமாக இது கருதப்படுவதால், கூட்டு நடவடிக்கையின் மூலமே உண்மையை வெளியே கொண்டுவர முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்!

மேலும், அமெரிக்கர்களின் பணத்தையும் ராஜு சுருட்டிவிட்டதால், அமெரிக்காவில் இருந்தும் விசாரணை கோரப்படும் என்று தெரிகிறது.

செபியின் நெறிமுறைகளை மீறியதற்கும், கம்பெனிகளின் சட்டத்தின்படியும்,
முதலீட்டாளர் களை ஏமாற்றினார் என்பதால் இந்திய தண்டனைச் சட்டப் படியும் கிட்டத்தட்ட ரூ.25 கோடி அபராதத் தொகையோடு, பத்து ஆண்டுகள்வரை சிறை தண்டனையும் கிடைக்கக்கூடும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். இதெல்லாமே, முறையாக விசாரணை நடந்தால்!

இத்தனை களேபரங்களுக் கிடையில் ராமலிங்க ராஜுவைக் காணவே இல்லை! அலுவல கத்தில் இல்லை. அமெரிக்கா போய்விட்டார் என்கிறார்கள் சிலர். யாருக்கும் அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.
(லேட்டஸ்ட் செய்திகளின்படி, ராஜு சரணடைந்து விட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது)

சத்யம் நிறுவனங்களின் கட்டட வாயில்களில் போலீஸார் குவிக்கப்பட்டு,முதலீட்டாளர்கள் கோபத்தில் நாசம் விளைவித்து விடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்வுகள் அப்பட்டமாக வெளியே தெரிந்து பங்குச்சந்தையில் பீதி உலவ ஆரம்பித்திருக்கும் நிலையில், சத்யம் நிறுவனங்களில் வேலைபார்த்துவிட்டு வெளியே வந்த ஊழியர்கள் அவமானத்தால் கூனிக் குறுகி இருந்தார்கள். இப்படிப் பணியில் இருக்கும் 53,000 ஊழியர்களின் எதிர்காலம் ஒருபக்கம் கேள்விக் குறியாகி இருக்கிறதென்றால், பல கோடி ரூபாய்களை முதலீடு செய்துவிட்டு இன்று ஓட்டாண்டிகளாக ஆகி நிற்கும் முதலீட்டாளர்களின் நிலை ரொம்பவும் பரிதாபம்!

வளர்ச்சியும் புகழும் வரும்போதுதான் உண்மையும் நேர்மையும் கூடுதலாக
இருக்க வேண்டும் என்பதை ஒரு தனிமனிதர் மறந்து போனதன் விளைவை -இன்று தேசம் சந்திக்கிறது!
===============

சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ் நிறுவனத்தை உருவாக்கிய ராமலிங்க ராஜு, விஜயவாடா அருகே உள்ள பீமாவரத்தைச் சேர்ந்தவர். பைரராஜ்ஜு என்ற குடும்பத்தைச் சேர்ந்த அவருடைய தந்தை சத்யநாராயணா ராஜு, ஒரு விவசாயி. அமெரிக்காவில் உள்ள ஒஹையோ பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பை முடித்த ராமலிங்க ராஜு, 1987-ல் சத்யம் நிறுவனத்தைத் தொடங்கினார். வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் இருந்து மென்பொருள் தயாரித்து வழங்கும் புதிய தொழிலை 'சத்யம்' செய்யத் தொடங்கியது.

ஆரம்பத்தில் இருந்தே ராமலிங்க ராஜுவுக்குப் பிற துறைகளில் ஆர்வம் உண்டு. அவருடைய குடும்பம், 'சத்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் லிமிடெட்' நிறுவனத்தை நடத்தி வந்தது. பிறகு, 'சத்யம் இன்ஃபோவேஸ்,' 'சத்யம் என்டர்பிரைசஸ்' போன்ற நிறுவனங்களையும் தொடங்கி நடத்தினார். ஒவ்வொரு கட்டத்திலும் நல்ல லாபம் வரும்போது, இந்த சகோதர நிறுவனங்களை அவர் விற்கவும் செய்தார்.

ரியல் எஸ்டேட் துறை மீண்டும் தலையெடுக்கத் தொடங்கிய போது, 'மேடாஸ் பிராப்பர்ட்டீஸ்' மற்றும் 'மேடாஸ் இன்ஃப்ரா' ஆகிய நிறுவனங்களைத் தொடங்கி நடத்தினார் ராமலிங்க ராஜு. இந்த நிறுவனங்களை அவருடைய மகன்களான தேஜா ராஜு,ராம ராஜு ஆகியோர் நிர்வகித்து வந்தனர். ஆரம்பத்தில் இருந்து ராமலிங்க ராஜுவுடன் கூடவே இருப்பவர், அவருடைய தம்பி ராம ராஜு . மைத்துனர் சிந்தா சீனிவாச ராஜுவும் ஒரு காலகட்டம் வரை சத்யத்தின் முக்கியத் துறை ஒன்றின் தலைவராக இருந்தார்.

ராமலிங்க ராஜுவுக்கு உறவினர்கள், தெலுங்கு பேசுபவர்கள் மீது அலாதி ஆர்வமுண்டு. தம் சொந்த ஊரான பீமாவரத்தில் தங்கள் குடும்ப உறவுமுறை வழி வந்த வீடுகளில் பெண் குழந்தை பிறக்கும்போதெல்லாம், ஒரு லட்சம் ரூபாயை அந்தக் குழந்தையின் பெயரில் வங்கியில் போட்டு வைப்பாராம் ராமலிங்க ராஜு. அப்பெண்ணுக்குத் திருமண வயது வரும்போது, அந்த பணத்தை எடுத்து கொடுப்பாராம்.


நன்றி: ஜுனியர் விகடன்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails